சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்த சாய் பல்லவி..!
தன் மீது தொடர்ச்சியாக கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகள் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஊடகங்களுக்கு நடிகை சாய் பல்லவி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி சமீபத்தில் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், அடுத்ததாக அவர் ராமாயணம் என்ற பிரம்மாண்டமான படத்தில் சீதை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நடிப்பதால், அசைவம் சாப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், படப்பிடிப்பு முடியும் வரை உணவகங்களில் கூட சாப்பிடாமல் சமையல்காரர்களை அவர் செல்லும் எடுக்க அழைத்துச் செல்வதாகவும், முன்னணி ஊடகத்தில் செய்தி வெளியானது.
இந்த செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சாய் பல்லவி, "நோக்கத்துடன் அல்லது நோக்கமில்லாமல் கூறப்பட்ட இந்த ஆதாரமற்ற புரளிகளுக்கும் பொய்களுக்கும் தவறான கூற்றுகளுக்கும் நான் எப்போதும் அமைதியாகவே இருந்துள்ளேன். ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், எதிர்வினை ஆற்ற வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இனிமேல் என்னை பற்றி கட்டுக்கதைகள் அல்லது புரளி ஆகியவற்றை எந்த ஒரு ஊடகமும் பரப்பினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்," என்று தெரிவித்தார். சாய் பல்லவியின் இந்த கருத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
Edited by Mahendran