திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (08:09 IST)

நீட் தேர்வுக்கு எதிராக இயக்குனர் பா ரஞ்சித் அறிக்கை!

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ள நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பா ரஞ்சித்தின் அறிக்கையில் ‘சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இதன் காரணமாக எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டம் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் நீட் தேர்வு அத்தகைய நோக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. சமமான வாய்ப்பைப் பெற இயலாதவர்களை வாய்ப்பு பெற்றவர்களுக்கு இணையாக நிறுத்துகிறது. இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க முடியாது. ஆனால், நீட் தேர்வை ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்தியிருப்பதால் வேறுவழி இல்லாமல் எளிய பின்புலத்து மாணவர்களும் தங்கள் சக்திக்கு மேலான பொருட்செலவில் பயிற்சி மையங்களை நாட வேண்டியுள்ளது. இதுவொரு நவீன வணிகம் பொறுப்புள்ள அரசு. இத்தகைய நவீனக் கொள்ளையை அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் ஆற்றலை பயிற்சி மையங்களின் வணிக விதிகள் முடிவு செய்திட முடியாது.

தமிழகத்தில் நிலவும் தற்போதைய சுகாதாரக் கட்டமைப்பு இந்திய மாநிலங்களில் இதுவரை இல்லாதது. இந்த நிலை நீட் தேர்வு இல்லாத நிலையிலேயே சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம். கிராமப்புறம் மற்றும் விளிம்பு நிலை மாணவர்களைக் கணக்கில் எடுக்காமல் இந்தியா முழுமைக்கும் ஒற்றைத் தேர்வு என்கிற முடிவு சமூக நீதியல்ல. சட்டம், நீதி, அரசாங்கம் இவை யாவும் அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கானது என்பது உறுதி செய்யப்பட வேண்டுமானால் அடிப்படைக் கல்வி சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். எல்லாத் தரப்பினரையும் கணக்கில் கொண்டே எதிர்வரும் காலத்தில் கல்வி சீரமைப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வு கொண்ட இச்சமூக அமைப்பில் தேவைக்கேற்றார் போல் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மொழி, சுலாச்சாரம், தொழில் உள்ளிட்டவற்றில் பன்முகத்தன்மை நிலவும் நாட்டில் ஒரே கல்வி என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. இதனை மாற்றுவதற்கான ஒரே வழி கல்வி பாடத்திட்டம், தேர்வு சார்ந்த விஷயங்கள் மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் வலியுறுத்துகிறோம்.

கல்வி என்பது மனத்தடைகளை அகற்றி தன்னம்பிக்கையையும் சமூக விடுதலையையும் அடைவதற்கான கருவி. இக்கருவி இந்த நீட் தேர்வின் மூலமாக மாணவ, மாணவர்களிடையே சோர்வையும் பயத்தையும் கொடுப்பதாக மாறிவிட்டது. பெற்றோர்களின் துயரத்தில் பங்கெடுக்க முடியாமல், அவர்களது கேள்வியிலுள்ள நியாயத்திற்குப் பதிலளிக்கவும் முடியாமல், தடுமாற்றத்தோடு கழியும் இந்தக் காலம் நிறைவுப் பெற்றாக வேண்டும். தமிழ் வழி மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவர்க்கும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டுமென்பது அவர்களுக்கான உரிமை இச்சூழலில் புதிய பாடத் திட்டங்களையும் தேர்வுகளையும் அறிமுகப்படுத்துவது மாணவர்களைக் குழப்பத்திற்குள் தள்ளும். தமது ஆற்றல் மீதான கேள்விகளும் தாழ்வு மனப்பான்மையும் மேலெழும். எனவே, காலதாமதமின்றி இவை கருத்தில் எடுக்கப்பட்டு களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இந்நிலையில்தான் நீட் உருவாக்கக்கூடிய தாக்கம் குறித்த ஆய்வறிக்கையைத் தயார் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்த தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கும். அதே வேளையில் கால தாமதமில்லாமல் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், திரைத்துறையினர், கலை இலக்கியச் செயல்பாட்டினர், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் ஒன்று திரண்டு நம் கருத்துகளைத் தெரிவிப்போம். [email protected] என்கிற முகவரிக்கு நீட் தேர்வின் பாதிப்புகளை மின்னஞ்சல் செய்வோம். எனவே வரும் 13ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நவீன இந்தியாவென்பது தொழில்நுட்பக் கருவிகளை டிஜிட்டல் மயமாக்குவதன்று மாறாக சமூக விடுதலைக்கான வழியைக் கடந்த காலத்தை விடவும் ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தி நம்மை மேம்படுத்திக் கொள்வதேயாகும். மாணவர்களின் சமூக, கல்வி விடுதலைக்குத் துணை நின்று ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டு அரசை முழு மனதார நம்பி இம்மனுவைத் தங்களின் முன் வைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.