செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (15:33 IST)

"நாடு" திரை விமர்சனம்!

சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து வெளிவந்த திரைப்படம்  "நாடு".


இத் திரைப்படத்தில் சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். கொல்லிமலையில் உள்ள தேவநாடு என்ற ஒரு சிறு மலைவாழ் கிராமத்தில்   எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது.

இந்த ஊரில் மருத்துவமனை இருந்தும் மருத்துவர்கள் யாரும்  வராத காரணத்தால்  நிறைய உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் போராடி ஒரு மருத்துவரை வர வைக்கின்றனர். மருத்துவராக வந்த மகிமா நம்பியார் அந்த ஊர் மக்கள் சிலரது உயிரை காப்பாற்றுகிறார். இதனால் அந்த ஊர் மக்கள் அவரை தெய்வமாய் பார்க்கின்றனர்.

ஆனால் மருத்துவர் மகிமாவுக்கு அந்த ஊர் பிடிக்காத காரணத்தினால் டிரான்ஸ்பர் வாங்கி செல்ல திட்டமிடுகிறார். இதை புரிந்து கொண்ட அந்த கிராமத்து மலைவாழ் மக்கள் அவரை இந்த ஊரை விட்டு அனுப்பக் கூடாது என்று முடிவு செய்து ஊர்மக்கள் சில வேலைகளை செய்கின்றனர்.

மருத்துவரான மகிமா நம்பியார் ஊரை விட்டு சென்றாரா அல்லது அங்கே தங்கினாரா என்பது தான்  படத்தின் கதை. கதாநாயகன் தர்ஷன் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை காட்டியுள்ளார். தர்ஷனின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் ஊர் தலைவராக சிங்கம் புலி  தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

சிங்கம்புலி மகனாக நடித்திருக்கும் நடிப்பும் அவரது காமெடியும் சிறப்பாக உள்ளது. அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல், அங்கேயும் இருக்கவும் முடியாமல் மலைவாழ் மக்கள் காட்டும் அன்பை எப்படி திருப்பி செலுத்த முடியும் என்று அவரது  தவிப்பும் நடிப்பும் சிறப்பு .

கலெக்டராக வரும் அருள்தாஸ் அந்த கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை கொடுத்துள்ளார். மிக சிறப்பான கதை அம்சத்துடன் இப்படியும் சில மலை கிராமங்கள் உள்ளது என்று நம் கண் முன் காட்டி கண் கலங்க வைத்துள்ளார் இயக்குனர் எம் சரவணன்.

ஒரு நாட்டுக்கு  மருத்துவர் எவ்வளவு முக்கியம் என்பதை நாடு திரைப்படம் மூலம் பேசியுள்ளார். தேவநாடு மலை வாழ் கிராமத்தை தன் கேமரா கண்களால் அழகாக நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல்.

மொத்ததில் இந்த நாட்டுக்கு தேவை  "நாடு" திரைப்படம்.