செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (10:00 IST)

எனக்கு ஏதாவது ஆனால் அதற்கு சுசி கணேசன்தான் காரணம்… லீனா மணிமேகலை குற்றச்சாட்டு!

இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை கூறினார்.

மி டூ விவகாரம் தமிழ் சினிமாவில் முக்கிய விவாதப் பொருளாக மாறக் காரணமானவர்களில் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒருவர். 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுசி கணேசன் தன்னை அவருடையக் காரில் வைத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறினார். இந்த புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை கடந்த 9 ஆம் தேதி முடக்கியது. அதை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது சம்மந்தமாக பதிலளிக்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இப்போது லீனா மணிமேகலை தன்னுடைய முகநூல் பதிவில் ‘எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சுசிகணேசன் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அமலா பால் ஆகியோர்களை மிரட்டினார். பின்னர் என் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்தார். பின்னர் என் பாஸ்போர்ட்டை முடக்கும்படி செய்தார். நான் படிக்கும் கனடியன் பல்கலைக்கழகத்துக்கு எழுதி என்னுடைய மாணவர் விசாவை முடக்க முயற்சி செய்தார். இப்போது என் புகார்கள் குறித்து செய்திகள் பதிவு செய்யும் பத்திரிக்கையாளர்களை அவதூறு செய்கிறார். நான் மிகவும் பாதுகாப்பின்மையை உணர்கிறேன். எனக்கு ஏதாவது ஆனால் அது அவரால்தான் இருக்கும் என்பதை நான் அறிவிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.