1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (09:44 IST)

கொட்டுக்காளி படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்திருக்கக் கூடாது… இயக்குனர் அமீர் சர்ச்சைப் பேச்சு!

கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

பின்னணி இசையில்லாமல் உருவான இந்த திரைப்படம் ரிலீஸூக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதற்கு முக்கியக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி இருந்ததுதான். மேலும் சூரி, விடுதலை மற்றும் கருடன் ஆகிய திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்ததும் ஒரு காரணம்.

ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருக்கு புரியாமல் போனதாக அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர் “கொட்டுக்காளி திரைப்படம் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்பட்ட படம். அதை மையநீரோட்டா சினிமாவோடு ரிலீஸ் செய்திருக்கவேக் கூடாது. அப்படி தியேட்டரில் அந்த படத்தை ரிலீஸ் செய்தது வெகுஜன ரசிகர் மேல் செய்யும் வன்முறை. அந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்திருந்தாலே போட்ட பணத்தை எடுத்திருக்கலாம். “ எனப் பேசியுள்ளார். ஒரு இயக்குனராக இருந்து கொண்டு அமீர், இப்படி ஒரு மாற்று சினிமா முயற்சியைப் பற்றி விமர்சித்திருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.