வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2017 (22:59 IST)

எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடர வேண்டும். கமல்ஹாசன்

கடந்த சில மாதங்களாகவே தனது டுவிட்டரில் தமிழக மக்கள் எழுச்சியுறும் வகையில் பரபரப்பான டுவீட்டுக்களை போட்டு கொண்டிருந்த கமல்ஹாசன், தனது நற்பணி இயக்கத்தலைவர் சுதாகரின் கைதுக்கு பின்னர் மேலும் பரபரப்பு ஆனார். ஆட்சியாளர்களுக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கும் கமல், இன்று திடீரென வழக்கறிஞர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை செய்தார்.





நிர்வாகிகள் மத்தியில் கமல் பேசியதாவது: நாம் செய்யும் நற்பணி கண்டு இந்த மாநிலமல்ல, பக்கத்து மாநிலமே அழைத்து பாராட்டும் காலம் விரைவில் வரும். செய்வது நற்பணி, அதற்கு ஓய்வில்லை. நற்பணி இயக்கத்தின் மூலம் ரூ20 கோடி வரை கடந்த 20 ஆண்டுகளில் நற்பணி செய்துள்ளனர். ஆண்டுக்கு 1கோடி என்றாலும் அது யாராலும் முடியாத சாதனை. நடிகரின் பின்னால் வந்தவர்கள் தான் ரூ20 கோடி வரை நற்பணி செய்துள்ளனர். இதில் என் பங்களிப்பு 2% இருந்தாலே அதிகம். இது பெரிய அளவில் தொடர வேண்டும்

30-வருடங்களாக எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்ற நற்பணி, இன்னும் சிறந்த முறையில், பெரிய அளவில் நடைபெற வேண்டும். இதற்கு நான் என்றும் துணையிருப்பேன். என்னால் முடியாத எதையும் உங்களை நான் செய்யச் சொல்ல மாட்டேன். இனி, இன்னொரு சுதாகர் சிறைச் செல்வதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடர வேண்டும். நாம் செய்வது மக்கள் அரசியல். வாக்கு அரசியல் அல்ல. வாக்கு அரசியல்சாதி, மதம் பார்க்கத் தூண்டும்' இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.