கபாலி 600 கோடி வசூல்; சொன்னது மீடியா நான் இல்லை; தாணுவின் அந்தர்பல்டி
கபாலியால் நானே நஷ்டப்பட்டேன். கபாலி 600 கோடி வசூலித்ததாகச் சொன்னதெல்லாம் மீடியாதான், நான் சொல்லவில்லை என்று தயாரிப்பாளர் கலைபுலி தாணு கூறியிருக்கிறார்.
கபாலி படம் பெரும் தொகைக்கு விற்கப்பட்டது. படம் மகத்தான வெற்றி, வரலாறு காணாத வசூல் என்று வெற்றி விழாவில் தாணுவே கூறினார்.
ஆனால், திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகள் கபாலியால் நஷ்டத்தை சந்தித்துள்ளன. சுமார் இரண்டு கோடி நஷ்டஈடு கேட்டு அவர்கள் தாணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. முதலில் நஷ்டஈடு தருவதாகச் சொன்ன தாணு இப்போது முடியாது என்று கூறியதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். கபாலியால் நானே நஷ்டப்பட்டேன். கபாலி 600 கோடி வசூலித்ததாகச் சொன்னதெல்லாம் மீடியாதான், நான் சொல்லவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
தாணு பணம் தர முடியாது என்று கூறிவிட்டதால் ரஜினியை சந்தித்து முறையிட இருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். திருச்சி, தஞ்சாவூரைத் தொடர்ந்து மற்ற பகுதியிலுள்ள திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டஈடு கேட்டு போர்க்கொடி தூக்க உள்ளனர்.