1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (08:24 IST)

பட விளம்பரங்களிலும் சான்றிதழ் கட்டாயம்! – சான்றிதழ் வாரியம் உத்தரவு!

திரைப்பட விளம்பரங்களிலும் தணிக்கை சான்றிதழ் இடம்பெறுவது கட்டாயம் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். படத்தின் தன்மையை பொறுத்து அதற்கு அனைவரும் பார்க்க தகுந்த “யூ” சான்றிதழ், பெரியவர்களுடன் பார்க்கக்கூடிய “யூ/ஏ” சான்றிதழ், பெரியவர்கள் மட்டும் பார்க்க கூடிய “ஏ” சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.


இந்த சான்றிதழ்கள் திரைப்படம் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு முன்னர் சில நிமிடங்கள் காட்டப்படுகின்றன. இந்நிலையில் என்ன சான்று என்பதை அனைத்து வகை விளம்பரத்திலும் காட்ட வேண்டும் என மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

படத்தை விளம்பரம் செய்ய மேற்கொள்ளப்படும் போஸ்டர்கள், பத்திரிக்கை விளம்பரம், நோட்டீஸ், பேனர் மற்றும் தொலைக்காட்சி, இணையத்தில் வெளியிடப்படும் டீசர் வீடியோக்கள் அனைத்திலும் படத்தின் சான்றிதழ் கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும் என்றும், குறிப்பிட தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K