செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 13 மே 2024 (11:33 IST)

விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்......
 
படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில்,
 
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தொடர்ந்து அறுபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன், ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பாளர் பிரேம்குமார், கலை இயக்குநர் ஏழுமலை, சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம், நடன இயக்குநர் கிரிஷ், ஒலிப்பதிவு மற்றும் ஒலி கலவை பணியை மேற்கொண்ட அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்,  பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, யுகபாரதி மற்றும் ஞானக்கரவேல், தயாரிப்பு நிர்வாகிகள் குழுவினர், விளம்பர வடிவமைப்பு நிபுணர் கபிலன், ஆடியோ பார்ட்னர் திவோ, சமூக வலைதள பக்கங்களில் விளம்பரப்படுத்தும் பணியை ஏற்றிருக்கும் தினேஷ், மக்கள் தொடர்பு யுவராஜ் என படத்திற்காக பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் இயக்குநர் தமிழ் கதையை எழுதி இருந்தார். விஜய்குமார், பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி முதல் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கி இருந்தனர். 
 
இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் ரிச்சா ஜோஷி ஆகிய இருவருக்கும் கதையை வழிநடத்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரங்களை இயக்குநர் தமிழ் அளித்திருக்கிறார். அவர்களும் இதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள். 
 
எல்லோரையும் விட விஜய் குமாரும் நானும் சிறந்த நண்பர்கள். அவர் என்னிடம் எப்போது பேசினாலும் சினிமாவை தவிர்த்து வேறு எதையும் பேசியதில்லை. அவருக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தப் படம் உருவாகுவதற்கு அவர் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறார். அவரிடம் சினிமாவைப் பற்றி ஏராளமான புதிய புதிய ஐடியாக்கள் இருக்கிறது. சினிமாவில் அனைத்து விசயங்களையும் நன்கு அறிந்தவர். அவருக்கு நன்றி சொல்வதை விட,  ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் இல்லையென்றால் நான் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 
 
இந்தப் படத்தின் இயக்குநர் தமிழ்-  எனக்கு விஜய் குமார் மூலமாகத்தான் அறிமுகமானார். பவுண்டட் ஸ்கிரிப்ட் ஒன்றைக் கொடுத்தார். அந்த கதையை படித்ததும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நேர்த்தியாக எழுதியிருந்தார்
 
இந்தப் படத்தின் பணிகளை நாங்கள் 2021 ஆம் ஆண்டில் தொடங்கினோம். இதுபோன்ற அருமையான கதையை வழங்கியதற்காக இயக்குநர் தமிழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
 
நடிகை ரிச்சா ஜோஷி பேசுகையில்,
 
இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். இந்திய சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை வழங்கிய தமிழ் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த மேடையில் நிற்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் மொழி உச்சரிப்பில் உதவிய சக கலைஞரான விஜய் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 
 
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், 
 
நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர்கிறேன். 'அயோத்தி' திரைப்படத்திற்கு பிறகு நான் 'எலக்சன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் அழுத்தமான பெண்மணி வேடத்தில் நடித்திருக்கிறேன். 
 
'எலக்சன்' படத்தின் முன்னோட்டத்தை பார்த்திருப்பீர்கள். ரசித்திருப்பீர்கள். உண்மையில் இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கும், நடிகர் விஜய் குமாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
எனது தன்னம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. இதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆம்பூர் பகுதியில் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் ரிச்சா ஜோஷியை நான் வரவேற்கிறேன். நான் 'அயோத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகும்போது எனக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அது உங்களுக்கும் கிடைக்கும் என வாழ்த்துகிறேன். 
 
எலக்சன் திரைப்படம் மே 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது அனைவரும் வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 
 
படத்தின் நாயகனான விஜய்குமார் பேசுகையில்,
 
'' உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல்,  அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி... உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு... இந்த கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல்  மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா... பெரியப்பா... சித்தப்பா.. மாமா.. என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம். 
 
'அமாவாசை' போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது. 
 
இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். 
 
இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது. 
 
தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். அவருடனும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி தான். தொடர்ந்து தரமான படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். 
 
படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
எனது முந்தைய திரைப்படமான 'ஃபைட் கிளப்' திரைப்படத்தை வெளியிட்ட என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 
 
இயக்குநர் தமிழ் பேசுகையில், '' புகழ், பணம், போதை, பெண்... இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன்.
 
எனது இயக்கத்தில் வெளியான 'சேத்து மான்' படத்திற்காக ஆதரவை அள்ளி வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியையும், அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன். 
 
சேத்துமான் திரைப்படம் பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டது. இந்தப் படம் அது போல் எளிதாக தொடர்பு கொள்ளுமா? கொள்ளாதா? என்ற அச்சத்தில் தான் இங்கு நான் நிற்கிறேன். 
 
இங்கு படத்தைப் பற்றி பேசியவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கோணத்தில் பேசினார்கள். அதனால் படத்தைப் பற்றி நான் ஒரு விசயத்தை கூட சொல்லப் போவதில்லை. நீங்கள் படத்தை பாருங்கள். பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள். 
 
ஒரு படத்தை நிறைவு செய்த பின் ஒரு மாதம் வரை எதைப் பற்றியும் சிந்திக்காமல் இயல்பாக இருப்பேன். இதுதான் என்னுடைய வழக்கம். ஒரு மாதத்திற்கு பிறகு புதிய கதை... புதிய உலகம் ... அவற்றில் நுழைந்து விடுவேன்.  
 
சேத்து மான் படத்தை நிறைவு செய்துவிட்டு, ஒரு மாதம் கழித்து இப்படத்தில் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். பல வெர்ஷன்கள் எழுதினேன். இந்த தருணத்தில் 'சூரரை போற்று' என்ற ஒரு திரைப்படம் வெளியானது. அதில் விஜய்குமார் வசனகர்த்தவாக பணியாற்றி இருந்தார். அப்போது சேத்துமான் படம் வெளியாகவில்லை. டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியிடுவது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  
 
அந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இயக்கியதால் .. அடுத்த படத்தை பெரிய நிறுவனம் ஒன்றின் தயாரிப்பில் தான் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இதற்காக சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடனும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனததுடனும் தொடர்பில் இருந்தேன். 
 
ஆனால் அவர்கள் கதையைக் கேட்கவில்லை. அப்போதுதான் 'சூரரைப் போற்று' வெளியானது.  அரசியலைப் பற்றி நன்கு தெரிந்த.. என்னை விட நன்கு தெரிந்த ஒருவர்தான் இந்த படத்திற்கு தேவை என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போதுதான் நடிகர் விஜய்குமார் எனக்கு அறிமுகமாகி பழக்கமானார்.  அதன் பிறகு அவரிடம் இப்படத்தின் திரைக்கதையே கொடுத்தேன். இரண்டு நாள் கழித்து அழைப்பு விடுத்தார். அப்போது என்னை பற்றி கேட்டார். நான் சேத்து மான் என்ற படத்தில் இயக்கிவிட்டு அடுத்த படத்திற்காக இரண்டு பெரிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று விவரத்தை தெரிவித்தேன். 
 
அப்போது விஜய்குமார் நான் தற்போது ஃபைட் கிளப் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அந்த தயாரிப்பாளரிடம் இந்த கதையை சொல்லி படமாக உருவாக்கலாமா?  எனக் கேட்டார். 
 
அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் நாங்கள் இருவரும் நிறைய விவாதித்தோம்.  இரண்டு பெரிய நிறுவனங்களின் அழைப்பு வரும் என்று காத்திருந்தோம்.  
 
அப்போது ஒரு நாள் போன் செய்து தயாரிப்பாளர் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகை தந்திருக்கிறார் அவரை சந்தித்து இந்த 'எலக்சன்' படத்தின் கதையை சொல்வோம்.  அவருக்கு பிடித்திருந்தால் தயாரிக்கட்டும். காலத்தை வீணடிக்க வேண்டாம் என சொன்னார். 
 
எனக்கு கதை சொல்லத் தெரியாது. அதனால்தான் படத்தின் திரைக்கதையை எழுதி தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவேன்.
 
ஆனால் விஜய்குமார் இப்படத்தின் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து விட்டார். அவர் இயக்குநர் என்பதால்  இப்படத்தின் கதையைப் பற்றி அந்த தயாரிப்பாளரிடம் நிறைய எடுத்து சொல்லி இருக்கிறார்.  இருந்தாலும் தயாரிப்பாளர் கதையை சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். விருப்பமில்லாமல் அவரிடம் ஒரு மணி நேரம் கதையை சொன்னேன். நிச்சயமாக அவரிடம் என்ன கதை சொன்னேன் என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யாவை விஜய் குமார் விளக்கமாக எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து விட்டார்.  எனவே இந்தத் திரைப்படம் தயாராவதற்கும், நான் இந்த மேடையில் இயக்குநராக நிற்பதற்கும் முழு காரணம் விஜய்குமார் மட்டும்தான்.  இதனை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இங்கு பதிவு செய்கிறேன் என்றார்