வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (15:17 IST)

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து,இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா!

Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”.
 
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு,  இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார்.
 
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழாவில்  படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர்  கலந்து கொண்டனர் 
 
இந்நிகழ்வினில் ....
 
Disney+ Hotstar சார்பில் பிரதீப் மில்ராய் பேசியதாவது......
 
ஒரு சின்னப்படமாக தான் ஆரம்பமானது, ஹாட்ஸ்டாருக்காக ஆரம்பித்து இப்போது திரையரங்குக்குக் கொண்டு வருகிறோம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி சாருக்கு நன்றி. இயக்குநர் ராம், மாரி செல்வராஜ் உடன் வேலை செய்வோம் என நினைக்கவில்லை, இப்போது அது நடப்பது மகிழ்ச்சி. இங்குள்ள நடிகர்கள் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் அனைவருடன் வேறு பல படங்களும் வேலை பார்த்து வருகிறோம். வாழை மாரி செல்வராஜ் எனும் நாயகனின் கதை, அவர் வாழ்வில் அவர் பட்ட கஷ்டத்தைச் சொல்லும் படைப்பு இது. இது போல் இன்னும் பல நல்ல படங்கள் செய்வோம் என்றார்.
 
நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது......
 
நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த மேடை இது, மாரி செல்வராஜ் என்றாலே பயம் எனக்கு, மாரி சார் கால் பண்ணிச் சொல்லும் போது, என்னோட ட்ரீம் புராஜக்ட் இது, இந்தப்படத்துக்கு முழுமையான உழைப்பைத் தந்தால், உன் கேரியரில் நல்ல படத்தைத் தருவேன் என்றார். அந்த நொடியிலிருந்து  நான் என்னை சரண்டர் பண்ணி விட்டேன். இந்தப்படத்தில் நான் இருக்கக் காரணம் மாரி சார் தான். அவரிடம் நான் நல்லா நடிக்கிறேனா எனக் கூட கேட்டதில்லை, நன்றி சொன்னதுமில்லை, படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாளில் பாராட்டினார் எல்லாவற்றிற்கும் நன்றி சார். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், எல்லோருக்கும் நன்றி. 
 
நடிகர் கலையரசன் பேசியதாவது......
 
வாழை மிக முக்கியமான தமிழ் சினிமாவில் படமாக இருக்கும். என்னுடன் உழைத்த குழுவிற்கு வாழ்த்துக்கள். இது எனக்கே புதிய உலகமாக இருந்தது. இப்படம் மூலம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். உங்களுக்கும் இந்தப்படம் புது அனுபவமாக இருக்கும் நன்றி. 
 
நடிகை நிகிலா விமல் பேசியதாவது......
 
என் கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும். நான் நடித்ததை விட என்னுடன் நடித்த அந்த இரண்டு சிறுவர்கள் நடிப்பைத் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பு தந்த மாரி சாருக்கு நன்றி. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் நன்றி. 
 
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது......
 
இந்த மேடையில் இருக்கும் கபாலி தந்த ரஞ்சித், கர்ணன் தந்த மாரி செல்வராஜ்   இருவரையும் ஆத்மார்த்தமாக வாழ்த்துகிறேன். இந்தப்படத்தின் பாடல்களைப் பார்த்தேன். சந்தோஷ் நாராயணன் மாரி இருவரிடமும் ஒரு மேஜிக் இருக்கிறது. பாடல்கள் எல்லாம் அவ்வளவு நன்றாக வந்துள்ளது. மிகப்பெரிய சாதனைகள் படைக்கும் படைப்பாக இப்படம் இருக்கும் வாழ்த்துக்கள். ஹாட்ஸ்டாரில் மட்டுமல்லாது, திரையரங்கிற்குக்  கொண்டு வாருங்கள் என்றேன், அதை நிறைவேற்றிய மாரிக்கு நன்றி. இந்தப்படம் மிகச்சிறந்த வெற்றிப்படமாக இருக்கும். 
 
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது.......
 
தயாரிப்பாளர் கிடைக்காமல் அலைந்த மாரி இன்று தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் எனும் கனமிக்க படைப்புடன் வந்த மாரி, தன் சொந்த தயாரிப்பில், தன் மனதுக்குப் பிடித்த ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருப்பான் என நினைக்கிறேன். இப்போது கண்டண்ட் உள்ள படங்களை வெளியிடுவதும், டிஜிட்டல் ரைட்ஸ் விற்பதும் இப்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதில் ஹாஸ்டார் தயாரித்ததால் மாரி தப்பிவிட்டார் என்றே நினைக்கிறேன். இப்போது சினிமாவில் நல்ல படங்களை வெளியிடுவதில் உள்ள பிரச்சனைகளை அனைவரும்  பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தில் சந்தோஷ் நாராயணன் நல்ல இசையைத் தந்துள்ளார். படக்குழு நல்ல உழைப்பைத் தந்துள்ளனர். இயக்குநர் ராம், மாரியின் வழிகாட்டியாக இருக்கிறார். வாழை மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்.  
 
இயக்குநர் ராம் பேசியதாவது......
 
2018 ல் இதே மேடையில் நீலம் புரோடக்சன் பரியேறும் பெருமாள் ஆரம்பித்தது இந்த மேடை தான். அதே மேடையில் நிவி ஸ்டுடியோஸ் ஆரம்பிக்கிறது வாழ்த்துக்கள். என்னுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியது மாரி தான். அவனுடன் மலை ஏறும்போது அவனுள் கொட்டிக்கிடக்கும் பல கதைகளைச் சொல்வான்.  மலையேறும் போது மிகப்பெரிய துணையாக அவன் இருப்பான். மலையேறுவது அவன் ஜீனில் இருக்கிறது. பரியேறும் பெருமாளுக்குப் பிறகு அவன் பல மலைகள் ஏறிக்கொண்டே இருக்கிறான். அவன் பேசிக்கொண்டே இருப்பான் அதை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும், அது காலத்தின் கட்டாயம். அவன் இன்னும் பல உயரம் அடைய வாழ்த்துக்கள். அவனுக்குத் துணையாக இருக்கும் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள். 
 
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது......
 
இது எனக்கு ஸ்பெஷல் படம், எனக்கு மிகப் பிடித்த படம். 2011 ல்  நானும் ரஞ்சித்தும் அட்டகத்தி ரிலீஸ் பண்ண 6 லட்சம் வேண்டி நின்றோம் அது வாழ்நாள் முழுதும் உழைத்தாலும் கிடைக்காத பணம் அப்போது, அதன் பிறகு ரஞ்சித் வளர்ந்து, கபாலி வரை கூட்டி வந்தார். உன் டீமை மட்டும் என்றும் விட்டு விடாதே என்றார். அவர் தான் பரியேறும் பெருமாள் படம் பற்றிச் சொன்னார். இந்த இடத்தில் தான் பரியேறும் பெருமாள் பற்றி நிறையப் பேசினேன் இப்போது வாழைக்காகப் பேசுகிறேன், அந்தப்படம் உணர்வு ரீதியாக என்னை மிகவும் பாதித்தது, பார்த்தவர்கள் எல்லோரிடமும் அந்த படத்தைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.  பரியேறும் பெருமாள் போலவே வாழை பார்த்தும் வியந்து விட்டேன். இந்த திரைப்படம் தமிழ் சினிமா 5 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். இங்கிருக்கும் கலைஞர்கள் எல்லோரும் மக்களிடம் தாக்கத்தை உண்டு செய்யும் கலைஞர்களாக வளர்ந்திருக்கிறோம், கலை மூலம்  மிகச்சிறந்த படைப்புகளை உங்களுக்குத் தருவோம். 50 படங்களை நான் கடந்து இருக்கிறேன்,  நீங்கள் தந்த வரும் ஆதரவிற்கு நன்றி, இந்த திரைப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.
 
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது.......
 
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்ன்ன் படங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவு தான், இம்மாதிரியான படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்ல,  ஊக்கமாக இருந்தது, முதலில் உங்களுக்கு நன்றி.  இங்கு மேடையில் என்னுடன் பணியாற்றிய ரஞ்சித் சார்,  செண்பக மூர்த்தி சார், கலைப்புலி தாணு சார் என எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களிடம் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளேன்
 
என் அரசியல் தெரிந்து கொண்டவர்கள் என் உடன் தொடர்ந்து பணியாற்றுவதில் என்னைப் புரிந்து கொண்டு ஆதரவு தருவது மிகப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் ராம் சார் அவர் இருக்கும் தைரியம் தான் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நான் இயக்குநராக ஆகிவிட்டாலும்,  நான் மேடைகளில் உணர்ச்சி வேகத்தில் பேசி விடுகிறேன் என்னை என் உணர்ச்சியைப் புரிந்து கொண்டவராக, ஒவ்வொரு முறையும் அழைத்து அறிவுரை சொல்வார். உன்னுடைய கதை உணர்ச்சிகள் கொண்டது அதை என்றும் விட்டு விடாதே என்று அறிவுரை சொல்வார். ஒவ்வொரு நடவடிக்கையிலும்  அவரின் பங்கு இருக்கிறது அவருக்கு என் நன்றிகள்.  
 
உதயநிதி சார் மாமன்னன் ஷூட்டிங் சமயத்தில் வாழைப் படத்தைப் பார்த்து விட்டார். படத்தைப் பார்த்து விட்டு இந்த படத்தை நான் திரையரங்கில் வெளியிடுகிறேன் என்றார். சென்பகமூர்த்தி சார் எப்போதும் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், மாமன்னனில் நன்றாகப் பார்த்துக் கொண்டார்,  வாழை  படம் அவருக்குப் பிடிக்குமா ?  என்று சந்தேகத்திலிருந்தேன் அவர் படம் பார்த்துவிட்டு, இரண்டு மணி நேரம் பேசவில்லை, அதன் பிறகு இந்த படத்தில் நான் கண்டிப்பாக இருக்க வேண்டும் படத்தைத் திரையரங்குக்குக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவர் தான் இந்த படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளார் அவருக்கு என் நன்றிகள்.  சந்தோஷ் நாராயணன் முதல் படத்திலிருந்து மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணியில் பாடல்கள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம்தான் அதற்குக் காரணம், இந்த படம் செய்யும்போது அவர் கல்கி படம் செய்து கொண்டிருந்தார், அவருக்கு எப்படி சிங்க் ஆகும் எனப் பயந்து கொண்டு இருந்தேன், ஆனால் இது அட்டகாசமாகப் பாடல்களைத் தந்துவிட்டார். நன்றி. கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் எல்லோருமே மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இது என்னுடைய வாழ்க்கை கதை, நான் பட்ட கஷ்டத்தை அவர்கள் பட வேண்டும் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். நான் வாழ்க்கையில் என்ன கஷ்டம் பட்டேனோ, அதை நீங்கள் இந்த படத்தில் பட்டால் தான், அந்த வலி தெரியும் என்று சொல்லித் தான் அவர்களை நடிக்க வைத்தேன். மிக அட்டகாசமாக நடித்துள்ளார்கள். எனக்கு முழு சுதந்திரம் தந்து, நான் அடுத்த படங்களில் பணியாற்றிக்  கொண்டிருந்தாலும், எந்த கேள்விகளும் கேட்காமல், இந்த படத்தைத் தயாரிப்பதில் முழுமையான சுதந்திரத்தைத் தந்த, ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எனது நன்றிகள். என் மனைவி திவ்யா இந்த படம் மூலம் தயாரிப்பாளராக அவர் பெயரும் இந்த படைப்பில் இருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ஏனென்றால் இது என்னுடைய வாழ்க்கை கதை, என்னுடைய வாழ்க்கைக் கதையில் திரைப்படமாக வரும் போது, அதில் அவர் பெயர் வருவது மிக முக்கியம் எனக்கருதுகிறேன். அவர் ஒரு சினிமா ரசிகையாக இருந்தார். 
 
அதுதான் அவரையும் என்னையும் இணைத்தது. தயாரிப்பாளராக அவர் பெயர் வருவது பெருமையாக உள்ளது.  என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை, இந்த படத்தைப் பார்த்து முடிக்கும் போது, உங்களுக்கு என்னைப் பற்றி முழுதாக புரியும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.