1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:37 IST)

ஒரு வாரம் ஏ ஆர் ரஹ்மானாக மாறி வாழவேண்டும்… கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் ஆசை!

நேற்று பொன்னியின் செல்வன் -1 படத்தின் பின்னணி இசைக்காக ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இது ஏ ஆர் ரஹ்மான் வாங்கும் ஏழாவது தேசிய விருதாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக தேசிய விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளார் ரஹ்மான். அவருக்கு அடுத்த இடத்தில் இளையராஜா 5 விருதுகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்த விருது மகிழ்ச்சியில் ரஹ்மான் ரசிகர்கள் தற்போது திளைத்து வருகின்றனர். இந்நிலையில் ரஹ்மானின் தீவிர ரசிகர்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் ரஹ்மான் குறித்து வியந்து பேசியுள்ளார்.

அதில் “ஒரே ஒரு வாரம் ஏ ஆர் ரஹ்மானாக மாறி வாழவேண்டும். அவர் தன் மூளையில் எவ்வளவு புதுமைகளை வைத்துள்ளார்? அவர் மூளை எப்படி சிந்திக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். அவர் எப்போதும் இரவுகளில்தான் பணியாற்றுவாராம். அதுதான் எனக்கு சிக்கலாக இருக்கும். ஆனால் அவர் மூளைக்குள் செல்லவேண்டும் என்றால் அதுபற்றி கவலையில்லை.” என்று சிலாகித்துப் பேசியுள்ளார்.