திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (09:28 IST)

சக்க போடு போட்ட ரோமாஞ்சம் பட இயக்குனரோடு கைகோர்க்கும் பஹத் பாசில்!

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு போதுமான வரவேற்பு திரையரங்குகளில் கிடைப்பதில்லை என சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. ஆனால் இப்படியான சூழ்நிலையில் கூட சில சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பாராத வெற்றியைப் பெற்று நம்பிக்கை அளிக்கின்றன. கன்னடத்தில் வெளியான காந்தாரா மற்றும் தமிழில் வெளியான லவ் டுடே போன்ற படங்களே இதற்கு சாட்சி.

அந்த வகையில் இப்போது அப்படி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது மலையாளத்தில் வெளியான ரோமாஞ்சம் என்ற திரைப்படம். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படமாக குறுகிய லொகேஷன்களில் படமாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 54 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3 கோடி ரூபாயில் உருவான இந்த திரைப்படம் இந்த ஆண்டில் மலையாள சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் பஹத் பாசில். இந்த படத்தின் ஷீட்டிங் நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. இதை பஹத் பாசில் தன்னுடைய முகநூல் பக்கத்த்தில் அறிவித்துள்ளார்.