இந்தியன் 2- வில் கமலுடன் கைகோர்த்த பிரபல குணசித்திர நடிகர்!
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் ஒன்று புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருந்தார். ஊழலுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதி நடத்தும் போராட்டமே படத்தின் கதைக்களம்.
தற்போது 22 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த கமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக முத்துராஜ், பாடல்களை தாமரை, விவேக் ஆகியோர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலென்னவென்றால், குணசித்திர நடிகரான டெல்லி கணேஷ் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் இயக்குனரான ஷங்கருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.