1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (11:23 IST)

2023ல் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி படுதோல்வி அடைந்த திரைப்படங்கள்..!

Flop
2023 ஆம் ஆண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த போதிலும் ஒரு சில படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட படங்கள் படுதோல்வி அடைந்த படங்கள் என்பதும்  அவற்றில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான பின்னர் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி படுதோல்வி அடைந்த பத்து படங்கள் குறித்து தற்போது பார்போம். 

 
 
1. சாகுந்தலம்
 
இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் படுதோல்வி படம் என்றால் சமந்தா நடித்த ’சாகுந்தலம்’ என்று சொல்லலாம். மகாபாரத கதையின் ஒரு கிளைக் கதையை எடுத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தை  குணசேகர் இயக்கினார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் உருவான  ’ருத்ரமாதேவி’ படுதோல்வி அடைந்த நிலையில் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பு பெறவில்லை. சுமார் 65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மொத்தம் வெறும் 20 கோடி தான் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இந்த படம் முதல் நாள் முதல் காட்சி வெளியான பின்னர் கேலிக்கும் கிண்டலுக்கும் உண்டானது. படத்தின் திரைக்கதை மிகவும் மோசமாக இருந்தது என்றால் சமந்தாவின் நடிப்பு ஓரளவு படத்தை தூக்கி நிறுத்தினாலும் கோர்வையான காட்சிகள் இல்லை என்றும்  படமாக்கப்பட்ட விதம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.  இந்த படத்தின் படுதோல்வியை சமந்தா எதிர்பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
2. ஆதிபுருஷ்

ADIPURUSH
 
பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 700 கோடிகள் என்ற நிலையில் பாதி மட்டுமே அதாவது 350 கோடி மட்டுமே வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயண கதையின்  சில அம்சங்கள் கொண்ட இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கிராபிக் காட்சிகள் கேலி செய்யப்பட்டது இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே கிராபிக்ஸ் காட்சிகள் படுமோசமாக உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் ஏராளமானோர் நடித்து இருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கோடிகளை கொட்டினாலும், வலுவான திரைக்கதை இல்லாததால் இந்த படம் படுதோல்வி அடைந்தது பிரபாஸுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
3. எல்.ஜி.எம்

 
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம் ’எல்ஜிஎம்’. ஹரிஷ் கல்யாண் நடித்த இந்த படத்தில் நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்பட்டது. தோனியின் தயாரிப்பு, தோனியே சென்னை வந்து இந்த படத்திற்காக புரமோஷன் செய்தது, பாடல்கள் ஹிட் ஆனது ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் படம் வெளியான முதல் நாள் இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த படம் வெறும் 9 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்பட்டது. முதல் தயாரிப்பு திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படம் என்பது தோனிக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பின்னர் அவர் இனிமேல் தமிழ் படம் தயாரிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது
 
4. தி கிரேட் இந்தியன் கிச்சன்

the great indian kitchen
 
 மலையாளத்தில் உருவான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் கேரளாவில் வசூலை  குவித்ததால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதே டைட்டிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் பெரும் தோல்வி அடைந்தது. இந்த படத்தின் பட்ஜெட்டில் பாதி கூட தேறவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டதாகவும் மிக மோசமான விமர்சனம் கிடைத்ததை அடுத்து இந்த படம் படுதோல்வி அடைந்தது என்றும் கூறப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு நன்றாக இருந்தாலும், மலையாளத்தில் இருந்த திரைக்கதை தமிழில் இல்லை என்றும் யோகி பாபு மட்டுமே ஓரளவுக்கு இந்த படத்தை நிமிர்த்தி கொடுத்தார் என்றும் கூறப்பட்டது. இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கியிருந்தார். 
 
5. அகிலன்

 
ஜெயம் ரவி திரைப்படங்கள் என்றாலே சராசரியாக ஓடிவிடும் என்றும் முதலுக்கு மோசம் இருக்காது என்றும் திரையுலகினர் கூறுவது உண்டு. ஆனால் ஜெயம் ரவி நடித்த ’அகிலன்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை சரியில்லாத நிலையில் படு மோசமான தோல்வி அடைந்தது. இந்த படத்திற்காக சென்னை துறைமுகத்தில் அனுமதி பெற்று பல ரிஸ்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாம். ஆனால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.  இந்த படத்திற்கு சமூக வலைதள விமர்சனங்கள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் மிகவும் மோசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
6.ருத்ரன்

 
ராகவா லாரன்ஸ் படங்கள் என்றாலே ஒரு காலத்தில் கோடிகளை குவிக்கும் என்று கூறுவது உண்டு. முனி, காஞ்சனா போன்ற படங்கள் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள். அந்த வகையில் தான் ’ருத்ரன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் தயாரிப்பாளர் கதிரேசன் முதல் முறையாக இந்த படத்தை இயக்கினார். இந்த படம் படம் 10 கோடி செலவில் எடுக்கப்பட்டது என்பதும் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானிசாகர், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளை நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஊடகங்களும் மோசமான விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து இந்த படம் மிகப்பெரிய படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
7. சந்திரமுகி 2

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி’ திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றி படம் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான் ’சந்திரமுகி 2’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான இந்த படத்தில் கங்கனா ரனாவத் இணைந்ததும் இந்த படத்தை எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்தது. மேலும் முதல் பாகத்தில் நடித்த வடிவேலு அதே கேரக்டரில் மீண்டும் நடந்தது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு தான் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது. ஒரு காட்சி கூட ரசிகர்கள் ரசிக்கவில்லை. கிளைமாக்ஸ் காட்சியை கூட  விளையாட்டுத்தனமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் வகையில் படமாக்கப்பட்டு இருந்தது பெரும் துரதிர்ஷ்டம் தான். லைகா  நிறுவனத்தை தயாரிப்பில் உருவான இந்த படம் சுமார் 65 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் 40 கோடி மட்டுமே வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.  எம்எம் கீரவாணியின் பின்னணி இசை மட்டும் ஓரளவு ஆறுதல் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
8. இறைவன்

 
ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'இறைவன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த அளவுக்கு மோசமான தோல்வியை அடைந்ததா? என்று ரசிகர்கள் மட்டுமின்றி பட குழுவினர்களை எதிர்பார்க்கவில்லை. ’தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதேபோல் இயக்குனர் அகமது இயக்கிய முந்தைய படங்கள் எல்லாம் நல்ல ஹிட் ஆனதால் இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசை உட்பட பல சாதகமான அம்சங்களும் இந்த படத்தில் இருந்த நிலையில் இந்த படம் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்தது என்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி தான். 
 
9. தி ரோடு

 
த்ரிஷா நடித்த பொன்னியின் செல்வன் உள்பட ஒரு சில படங்கள் இந்த ஆண்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்த ’தி ரோடு’ என்ற திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது, இந்த படம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட படமாக இருந்தாலும் அதன் பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. த்ரிஷாவே களத்தில் இறங்கி இந்த படத்திற்கு புரமோஷன் செய்தார். கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்த படம் முதல் நாள் முதல் காட்சி வெளியாகிய பின்னரே படுதோலி படம் என்பது புரிந்து விட்டது. இரண்டாவது நாளே இந்த படத்திற்கு திரையரங்குகள் காலியாக இருந்தது என்பதும் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே இந்த படம் தியேட்டர்களில் தூக்கப்பட்டு விட்டது என்பதை குறிப்பிடத்தக்கது. த்ரிஷா ஸ்டண்ட் காட்சிகளில் உயிரை கொடுத்து நடித்தும், இந்த படத்தின் திரைக்கதை படுமோசமாக இருந்தது என்றும், காட்சி அமைப்புகளில் இயக்குனர் கவனம் செலுத்தாமல் இருந்தார் என்றும் இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது
 
10. ஜப்பான்

 
 கார்த்தி நடித்த தீபாவளி திரைப்படம் என்றாலே அந்த படம் வெற்றி பெறும் என்றும் சொல்லலாம். 'கைதி’ ‘சர்தார்’ கிய படங்கள் தீபாவளி வெற்றி படங்களாக இருந்த நிலையில் ’ஜப்பான்’ திரைப்படமும் அதே போல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தரமான இயக்குனர் என்று பெயர் பெற்ற ராஜுமுருகன் இயக்கம், ஜிவி பிரகாஷின் இசை, கார்த்தியின் நடிப்பு ஆகியவை சேர்ந்ததால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகத்தில் நடந்த நகை கொள்ளை என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.  இந்த படத்தின் டீசர் ட்ரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றதால் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆன நிலையில் வரிசையாக விடுமுறை நாட்கள் இருந்தும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டமே வரவில்லை.  இந்த படத்தில் ஒருசில பாசிட்டிவ் இருந்தும் ராஜமுருகனின் திரைக்கதை படுமோசமாக இருந்ததால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran