திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 3 மே 2016 (10:48 IST)

ஜாலியான படங்களில் மட்டுமே நடிப்பேன் - தமன்னா பேட்டி

ஜாலியான படங்களில் மட்டுமே நடிப்பேன் - தமன்னா பேட்டி

நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி. அவர்களின் பாலிசியும் அப்படியே. கெட்டவனாக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார் ராஜ்கிரண். அதேபோல் தமன்னாவுக்கும் ஒரு பாலிசி இருக்கிறது. அது என்ன? 
 
அவரே சொல்கிறார்.
 
உங்களுக்கு எந்த மாதிரி படங்கள் பிடிக்கும்?
 
படங்கள் பார்ப்பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கும். சிலருக்கு நடுங்க வைக்கிற மாதிரி திகில் பேய் படங்கள் பிடிக்கும். சிலருக்கு அதுபோன்ற படங்களை பிடிக்காது. காதல் கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அழ வைக்கிற மாதிரியான சோக படங்களை விரும்புகிறவர்களும் உண்டு. ஆனால் எனக்கு அழுகை படங்களை சுத்தமாக பிடிக்காது. அப்படிப்பட்ட படங்களை பார்க்க யாரேனும் அழைத்தால் ஓடிப்போய் விடுவேன்.
 
ஆனால், நடிப்பில் வித்தியாசத்தை காட்ட விரும்புகிறவர்கள் நீங்கள் சொல்வது போன்ற படத்தில்தானே நடிக்க ஆசைப்படுகிறார்கள்?
 
இது போன்ற படங்களில் நடித்தால்தான் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த முடியும் என்று சொல்கின்றனர். அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த படங்களை பார்க்க எனக்கு பிடிக்காது.


 
 
ஏன்..? ஏனிந்த கறார் முடிவு?
 
ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கத்தான் காசு கொடுத்து தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் படங்களை காட்டி ஏன் அழ வைக்க வேண்டும்.
 
ஒருபோதும் அழ வைக்கும் படங்களில் நடிக்க மாட்டீர்களா?
 
அழ வைக்கிற சோக படங்களில் நடிக்க கொஞ்சம் கூட எனக்கு விருப்பம் இல்லை. சோகமான படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். நடிக்க மாட்டேன்.
 
ஒருவேளை அப்படியான படங்களில் நடித்தால்...?
 
வேறு வழியில்லாமல் அதுமாதிரி படத்தில் நடிக்க வேண்டி வந்தாலும் அதில் நடிப்பதோடு சரி. அந்த படத்தை நான் பார்க்க மாட்டேன்.
 
அப்படியானால் உங்களின் இந்த பாலிசிதான் இனியும் தொடருமா?
 
இதுவரை ஜாலியான படங்களில்தான் நான் நடித்து இருக்கிறேன். அதுபோன்ற படங்களில்தான் தொடர்ந்து நடிப்பேன்.
 
தமிழின் உங்களின் இரண்டாவது இன்னிங்ஸ் வீரம், தோழா என்று வெற்றியோடு ஆரம்பித்திருக்கிறது. அதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
கடவுளின் ஆசிர்வாதம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது உழைப்புக்கான பலன் இருந்தே தீரும். வீரம், தோழா படங்களின் வெற்றி என்னை மட்டும் சார்ந்ததில்லை. அது கூட்டு உழைப்பு.
 
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
 
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் காந்தா படத்தில் நடிக்க உள்ளேன். அதேபோல் விஷாலுடன் கத்திச்சண்டை. விஷாலுடன் இப்போதுதான் முதல்முறையாக நடிக்கப் போகிறேன். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறேன். 
 
பாகுபலி இரண்டாம் பாகத்தில் உங்களைவிட அனுஷ்காவே முக்கியத்துவம் என்ற பேச்சிருக்கிறதே?
 
அப்படியெல்லாம் இல்லை. அனைவருக்கும் அவரவர் கதாபாத்திரத்துக்கேற்ற முக்கியத்தும் இருக்கிறது. பாகுபலியில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது போல் இரண்டாவது பாகத்திலும் பேசப்படும்.