செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிருஷ்ண ஜெயந்தி
Written By

தர்மத்தை நிலைநிறுத்த பிறந்த கிருஷ்ணர்...!

கிருஷ்ணரின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி என்றும், சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படும் விழாவாகும். ஆவணி மாதத்தின் தேய்பிறை எட்டாம் நாளான அஷ்டமியும் ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நன்நாளில் கிருஷ்ணர் அவதரித்தார்.
மகாவிஷ்ணு துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன், நூற்றுக்கணக்கான கௌரவர்கள் ஆகியோரை அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார்.  தர்மத்துக்கு எதிராக பல அதர்மங்களை செய்த கம்சனை அழிக்கும்படி பிரம்மாவிடம் பூமாதேவி முறையிட்டாள். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என வாக்குறுதி கொடுத்தார் பிரம்மா. அதன்படி வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கண்ணனை பிறக்க வைத்து  தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.
 
கம்சனின் தங்கையான தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிச்சயம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் அசரீரியாக ஒலிக்க, அச்சமுற்றான் கம்சன். உடனடியாக தேவகியை கொல்ல முற்பட்டபோது, அதனை தடுத்த வசுதேவர் தனக்கு பிறக்கும் குழந்தைகளை கம்சனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதனை ஏற்ற கம்சன் அவர்களை சிறையில் அடைத்து கண்காணித்து வந்தான். தேவகிக்குப் பிறந்த ஆறு  குழந்தைகளையும் கம்சன் கொன்றான்.
 
தேவகிக்கு ஏழாவது குழந்தை கருவுற்றதும், மகாவிஷ்ணு, மாயை என்ற பெண்ணைப் படைத்து தேவகியின் வயிற்றில் உள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு என்றார். பிறகு நீ நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும் என்றார். அதன்படியே மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக கூறிவிட்டனர். அதை கம்சன் அப்படியே நம்பிவிட்டான்.  தேவகியின் ஏழாவது குழந்தை ரோகிணியின் வயிற்றில் வளர்ந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, மகாவிஷ்ணு அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறையின் அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்நாளில் கிருஷ்ணர் அவதரித்தார்.
 
“நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என கிருஷ்ணர் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்கள்.