எங்களால முடியாது... கைவிரித்த இலங்கை; என்னவாகும் ASIAN CUP 2022?
ஆசியக் கோப்பை டி20 போட்டியை நடத்த முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக உள்ளூரில் ஆசியக் கோப்பை டி20 போட்டியை நடத்த முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம்,ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவித்துள்ளது.
போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ள இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அல்லது வேறு இடத்தில் போட்டியை நடத்துவதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் ஆசிய கோப்பை நடைபெற உள்ளதால், அடுத்த சில நாட்களில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இறுதி மாற்று இடம் அல்ல, அது வேறு ஏதேனும் நாடாகவும் இருக்கலாம். இறுதி ஒப்புதலை பெற முதலில் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் பேச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.