அமெரிக்காவை பந்தாடிய அர்ஜெண்டினா - மெஸ்ஸி புதிய சாதனை


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 23 ஜூன் 2016 (14:28 IST)
கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
 
 
போட்டியை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்த அர்ஜெண்டினா இரண்டாவது பாதியிலும் இரண்டு கோல்கள் அடித்தது.
 
ஆட்டம் துவங்கிய 3வது நிமிடத்திலே அர்ஜெண்டினா வீரர் எஸெக்கியேல் லாவேஸி கோல் அடித்து அமெரிக்காவிற்கு அதிர்ச்சியளித்தார். கோல் பாக்ஸிற்கு வெளியேயிருந்து மெஸ்ஸி உயரத்தில் உதைத்துவிட்ட பந்தை தலையால் மோதி மிக அழகாகக் கோல் வளைக்குள் செலுத்தினார் லாவேஸி.
 
முதல் கோலுக்கு வழி ஏற்படுத்திய மெஸ்ஸி ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி மிக அற்புதமாகக் கோல் அடித்தார். மற்றுமொரு நட்சத்திர வீரர் கொன்சாலே க்வொய்ன் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். அவர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 50 மற்றும் 86வது நிமிடங்களில் கோல்அடித்து அசத்தினார்.
 
மெஸ்ஸி சாதனை:
 
இத்தொடரில் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, நாட்டிற்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவர் கேப்ரியல் பாடிஸ்டுடாவின் சாதனையை முறியடித்தார். மெஸ்ஸி இதுவரை நாட்டிற்காக மொத்தம் 55 கோல்கள் அடித்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள மெஸ்ஸி, “பாடிஸ்டுடாவின் சாதனையை முறியடித்து உண்மையையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயத்தில் எனது அணியினருக்கும் நன்றியை தெரிவித்து கொளிகிறேன். அவர்களால்தான் இது நிகழ்ந்தது” என்று கூறியுள்ளார்.
 
அர்ஜெண்டினா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதிக் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை 14 முறை வென்றுள்ளது. 15வது முறையாகக் கோப்பையை வெல்வதற்கு அந்த அணிக்கு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது.
 
இது மட்டுமல்லாமல் 1993க்குப் பிறகு அர்ஜெண்டினா எந்தவொரு பிரதானமான போட்டித் தொடரிலும் கோப்பையை வென்றதில்லை. கடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும், கோபா அமெரிக்கா போட்டியிலும் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா தோற்றுக் கோப்பையை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :