புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (13:29 IST)

ஐஎஸ்எல் கால்பந்து: களம் இறங்கும் 8 அணிகள், போட்டி பட்டியல்

ஐஎஸ்எல் 3-வது சீசன் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி டிசம்பர் 18-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றனர். 


 
 
ஐஎஸ்எல் கால்பந்து:
 
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரானது தொழில்முறை சார்ந்து இந்தியாவில் நடத்தப்படும் தொடராகும். இந்தியாவில் நடத்தப்படும் முக்கிய தொடர்களில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், பிரபலமான லா லிகா, புன்டெஸ்லிகா போன்ற கால்பந்து தொடர்களின் பட்டியலில் ஐஎஸ்எல் தொடருக்கு 5-வது இடம்.
 
கால்பந்து உலகில் ஜொலிக்கும் முக்கிய வீரர்கள் இந்திய கால்பந்து வீரர்களுடன் இணைந்து விளையாடுவது, இந்தியாவில் கால்பந்து போட்டிகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கின்ற வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது. 
 
எட்டு அணிகள்:
 
கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, சென்னையின் எப்சி, எப்சி கோவா, எப்சி புனே சிட்டி, மும்பை சிட்டி எப்சி, அட்லெடிகோ டீ கொல்கத்தா எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி, மற்றும் டெல்லி டைனமோஸ் எப்சி என இந்தியாவில் இருந்து எட்டு அணிகள் பங்கேற்கும். 
 
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐஎஸ்எல் சீசனில் அட்ரெடிகோ டீ கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசனில் சென்னையின் எப்சி அணி சாம்யன் பட்டத்தை கைப்பற்றியது.
 
போட்டி விவரங்கள்:
 
இந்த ஆண்டு நடைபெறவுள்ள 3-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. 
 
3-வது ஐஎஸ்எல் போட்டி மொத்தம் 79 நாள்கள் நடைபெற உள்ளது. ஐஎஸ்எல்-2016-ல், 56 லீக் ஆட்டங்கள் உட்பட மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
 
அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி- கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் காவுகாத்தி நடைபெறுகிறது. 
 
முதல் அரையிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 10-ந் தேதி மற்றும் 11-ம் தேதிகளிலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டங்கள் 13 மற்றும் 14-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. 
 
இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. அரை இறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.