தோனிக்கும் 300, மலிங்காவிற்கும் 300! என்ன ஒரு ஒற்றுமை
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஒருநாள் போட்டி தோனிக்கு 300வது ஒருநாள் போட்டி என்பது தெரிந்ததே. ஆனால் இந்த போட்டியில் நேற்று மலிங்கா 300வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் 300 விக்கெட்டுக்களை கைப்பற்றிய 4வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் முரளிதரன், வாஸ், ஜெயசூர்யா ஆகியோர் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
300 விக்கெட்டுக்களை வீழ்த்தியபோதிலும் நேற்று ஒரு கேப்டனாக மலிங்கா மகிழ்ச்சியாக இல்லை. இதுகுறித்து மலிங்கா கூறியபோது, ' ’300 விக்கெட் எடுத்ததில் மகிழ்ச்சி. அது வெறும் எண்ணிக்கைதான். ஆனால் போட்டியில் தோற்றது துரதிருஷ்டமானது.
கடந்த 5 போட்டிகளில் நாங்கள் 250 ரன்களை கூட தொடவில்லை. இளம் வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு அனுபவம் தேவையாக இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.