வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (09:34 IST)

“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ரிலீஸ் தேதியை அறிவித்தது Netflix !

இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான "நவரசா" Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம்,  தமிழ் திரையுலகின்  பொன்தருணமாக நிகழவிருக்கிறது
 
மும்பை 2021 ஜுலை 9 : தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
 
மனித உணர்வுகள் - கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது கதைகள் ஆந்தாலஜி திரைப்படமாக Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.
 
தமிழின் பல முன்னனி, திரை ஆளுமைகள் இணைந்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம்  தமிழ் திரைக்கு பெருமை சேர்க்கும் படைப்பாக ஒரு உன்னத தருணமாக நிகழவிருக்கிறது. தமிழ் திரையுலகில் பெரும் புகழையும் பிரபல்யத்தையும் குவித்திருக்கும் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை ஆளுமைகள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்து இந்த கனவு படைப்பினை நிகழ்த்தியிருக்கிறார்கள். 
 
தமிழின் உன்னத படைப்பாளிகள் ஒன்றினைந்து உருவாக்கியிருக்கும் இப்படைப்பில் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள்,  கொடிய நோய்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தில் எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின்பேரில் பணிபுரிந்துள்ளார்கள்.
 
தமிழ் திரைத்துறையில் தங்களின் தரமான படைப்புகள் வழியே உலக அளவில் சாதனை புரிந்த முன்னணி படைப்பாளிகளான அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர்.
 
“நவரசா” ஆந்தாலஜி படைப்பு குறித்து   மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் கூறியதாவது..,
 
ஒரு நல்ல விசயத்துக்காக நிதி திரட்டும் பணிகளை நாங்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறோம். ஆனால் இந்த உலக பொது முடக்கம் எங்கள் முகத்தில் அறையும் உண்மையை எடுத்து சொல்லியது. நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த பொது முடக்கத்தினால் திரைத்துறை தான்  மிகப்பெரும் பாதிப்பை பெற்றுள்ளது என்கிற உண்மையை உணர்ந்தோம். சக திரை தொழிலாளர்களுக்காக, ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது.
 
திரைதுறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில், உதவும் எண்ணத்தில் பிறந்தது தான் “நவரசா” ஆந்தாலஜி படைப்பு. இந்த ஐடியாவை எங்களது சக, முன்னணி படைப்பாளிகள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களிடம் எடுத்து சொல்லியபோது, அவர்களின் ஆதரவு பிரமிப்பு தருவதாக இருந்தது. அனைவரும் வெகு உற்காசத்துடன் பணிபுரிய சம்மதித்தார்கள். இந்த ஒன்பது படங்களும் மிகப்பெரும் முன்னணி ஆளுமை நிறைந்த குழுக்களுடன், மிக கடினமான சிக்கலான நோய்தொற்று காலத்தில் திட்டமிடப்பட்டது. 
 
ஆனால் நோய் தாக்காதவாறு அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டு முழுப்பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இப்போது படம் நிறைவடைந்துள்ளது. தங்கள் சக தோழர்களுக்காக திரை ஆளுமைகள் மிகப்பெரும் அர்ப்பணிப்புடன், ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் அற்புதமான படைப்பை உலகம் முழுதும் 190 நாடுகளில் கண்டுகளிக்கலாம்.
 
தங்கள் திரைத்துறை நண்பர்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் தரும் பொருட்டு, முன்னணி கலைஞர்கள் எந்த ஊதியமும் பெறாமல், முழு அர்ப்பணிப்பை தந்து, உருவாக்கியிருக்கும் இந்த உன்னத படைப்பினை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமை கொள்கிறோம். நம் திரைத்துறை கலைஞர்கள் மற்றும்  வல்லுநர்களின் திறமையை எடுத்து காட்டும், இந்த அற்புத ஆந்தாலஜி திரைப்படம் 12000 திரைத்துறை தொழிலாளர்களுக்கு இந்த பொதுமுடக்கத்தில் ஆதரவை தந்துள்ளது.
 
திரைத்துறை முழுதிலிருந்தும் கிடைத்து வரும் ஆதரவுகள் Bhoomika Trust மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது. உணர்ச்சிபூர்வமான இந்த திரைப்பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்காக Netflix நிறுவனத்திற்கு நன்றி. பெருமை மிகு படைப்பாளி பரத்பாலா அவர்களின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களை வித்தியாசமான பார்வையில், ஒன்பது கதைகளாக சொல்லும், இப்படத்தின் டீஸர், இன்று ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.