2.0 படப்பிடிப்பு 100 -வது நாளை தொட்டது... மகிழ்ச்சி
மலையாளத்தில் முப்பது தினங்களில் ஒரு சூப்பர்ஹிட் படம் தயாராகிவிடும். தமிழில் அறுபது எழுபது தினங்கள். சில தினங்கள் முன்பு இயக்குனர் ஷங்கர், 100 நாள் படப்பிடிப்பு முடிவடைந்தது, ஐம்பது சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம் என்று அறிவித்தார். அவர் ஸ்டைல் அப்படி.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதம் 16 -ஆம் தேதி ஷங்கர் தொடங்கினார். படப்பிடிப்பு தினங்கள் இந்த வாரம் 100 தினங்களை கடந்தது. இதுவரை அக்ஷய் - ரஜினி மோதும் இரண்டு பிரமாண்ட சண்டைக் காட்சியையும் கொஞ்சம் டாக்கி போர்ஷனையும் எடுத்திருக்கிறார்கள். இரண்டில் ஒன்று கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி.
இதேவேகத்தில் படப்பிடிப்பை நடத்தி அடுத்த வருட கோடைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கிராபிக்ஸ் பணிகள் அதிகமிருப்பதால் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளிவரவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சேச்சே... அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை
போகன் படத்தை குறித்து பேசுகையில் இயக்குனர் லக்ஷ்மணனுக்கு இரண்டு வாய். அவரது முதல் படம் ரோமியோ ஜுலியட்டில் நடித்த ஜெயம் ரவி, ஹன்சிகாதான் போகனிலும். ஆனாலும், தனி ஒருவனில் நடித்த ஜெயம் ரவி, அரவிந்த்சாமி மீண்டும் போகனில் இணைந்ததைதான் அதிகமாக சிலாகித்து பேசுகிறார். அவர்கள்தான் கதையின் முதுகெலும்பு நல்லி எலும்பு எல்லாம்.
கதைப்படி முதல்பாதியில் ஜெயம் ரவி ஹீரோ, அரவிந்த்சாமி வில்லன். இரண்டாவது பாதியில் ஜெயம் ரவி வில்லன், அரவிந்த்சாமி ஹீரோ. இதே கதைக்களத்தில் ஜான் வூ இயக்கத்தில் ஹாலிவுட்டில் முன்பு ஒரு படம் வெளிவந்தது. Face off. அதன் தழுவலாக இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு கிசுகிசு. சேச்சே... லக்ஷ்மண் அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு என்று வேறு சிலர்.
வேறு சிலரின் நம்பிக்கையை காப்ப்பாற்ற வேண்டியது லக்ஷ்மணின் பொறுப்பு.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.....
நான் சென்னையிலேயே இல்ல
பிறந்தநாள் அன்று சென்னையில் இல்லாமல் பார்த்துக் கொள்வது ரஜினி ஸ்டைல். பிறந்தநாளில் நிம்மதியாக வீட்டில் இருந்தோமா ரெஸ்ட் எடுத்தோமா பால் பாயாசம் சாப்பிட்டோமா என்றிருக்க விடமாட்டார்கள். தலைவா தலைமையேற்க வா என்று பிறந்தநாள் அன்று அதிகாலையிலேயே காக்கா கூட்டம் போல் ரசிகர்கள் கத்த ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களை சமாதானப்படுத்த வெளியே வர வேண்டும். பெரிய வேலை. சமயத்தில் ட்ராபிக்கையும் ஜாமாக்கிவிடுவார்கள்.
விஜய்யை பொறுத்தவரை பொது இடத்தில் ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டிதான் பழக்கம். அது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமாக கருதிய அதிகார மையம் பொது இடத்தில் கேக் வெட்டவும் கடந்த சில வருடங்களாக அனுமதிக்கவில்லை. அதனால் படப்பிடிப்புக்கு வந்தோமா, பிரியாணி பரிமாறினோமா என்று மதிய சாப்பாட்டுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் கதம் கதம்.
இந்த வருடம் பரதன் படத்தின் படப்பிடிப்பை காரணம்காட்டி ஹைதராபாத்தில் டேரா போட விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல். ஏன் கூட்டம் போட்டு கேக் வெட்டலை என்று பதிலை தெரிந்து வைத்தே கேள்வி கேட்பவர்களை தவிர்க்கலாம்.
ம்... பிரபலமாகயிருப்பது அப்படியொண்ணும் எளிமையானதில்லை.
இந்த விஜய் ரொம்ப பாஸ்டு
ஏ.எல்.விஜய் மும்மொழிகளில் இயக்கிவரும் ஹாரர் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா? அதனால்தான் டைட்டிலே அந்த மாதிரி வைத்தோம்.
விஜய் இயக்கிய படங்களில் மதராசப்பட்டணம் மட்டுமே வெற்றி. தலைவா, தாண்டவம், சைவம், கிரீடம் கடைசியாக வெளிவந்த இது என்ன மாயம் எல்லாமே தோல்வி. இருந்தும் அவருக்கு படங்களுக்கு குறைவில்லை.
இதோ இந்த மும்மொழி படத்தைத் தொடர்ந்து மாதவனை வைத்து மலையாள சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார்.
பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள ஹாரர் படத்தை இப்போதுதான் தொடங்கியது போலிருக்கிறது. அதற்குள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது படம். தமிழில் படத்தின் பெயர் தேவி. தெலுங்கில் அபிநேத்ரி. இந்தியில் டெவில்.
படம் எப்போங்க ரிலீஸ்?