வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஐஸ்வரியம் பெருக செய்யும் பைரவர் வழிபாட்டை எவ்வாறு செய்வது...?

ஸ்ரீ தத்துவநிதி எனும் நூல் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும் இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன்-பொருள் சேரும்; ஐஸ்வரியம் பெருகும் என்பர்.
ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர். தினமும் காலை 4.30 மணி முதல் காலை 6 மணிக்குள் இந்த  வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம்.
 
வீட்டின் பூஜையறையில் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் படத்தின் அருகில்  கிழக்கு நோக்கி (ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்) அமர்ந்து கொள்ள வேண்டும். செவ்வரளி மாலையை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.
 
தினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது. கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும். சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்.
 
பிறகு அவரது பாதத்திலும், பிறகு ஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி, சூலாயுதம், அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும் குங்குமம்  வைக்கக் கூடாது பிறகு, சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும் பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு ஸ்ரீசொர்ணாகர்ஷண  பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.
 
இவ்வாறு பாடுவதற்கு முன்பே வீட்டில் சமையல் முடிந்திருந்தால் நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும், அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும் இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீசொர்ணாகர்ஷண  பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.
 
இரவில் தூங்குவதற்கு முன்பு (வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு) படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த  சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி, வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட  வேண்டும்.
 
பல நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள், அதுவரை ஒவ்வொரு நாளும் நாம்  வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்து விடுகிறது.
 
இந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில் (ஜனனம், ருது, சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டு முறைக்கு, விடுமுறை விடுவது அவசியம்.
 
மாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு (மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது, ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும், நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும். நமது  ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்.
 
ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிடவேண்டும். காய்ந்த பூக்கள்  ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது. இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது. கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர் வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்.