1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் என்ன...?

வரலக்ஷ்மி விரதம் கடைபிடிக்கபடுவதின் முக்கிய நோக்கம் என்னவென்றால் தன கணவன் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும், வீட்டில் எல்லா செல்வங்களும் நிறைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபடுவதாகும்.
 
வரலக்ஷ்மி  விரதத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற நியதிகள் கிடையாது. உள்ள தூய்மை, உண்மையான இறை பக்தி இருக்கும் அனைவரும் இவ்விரதத்தை மேற்கொள்ள தகுதியானவர்கள் தான்.
 
வரலக்ஷ்மி விரதத்தை திருமணம் ஆகாத பெண்கள் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று விரதத்தை கடைபிடிக்கலாம். சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று கடைபிடிக்கலாம்.
 
வரலக்ஷ்மி விரதம் அன்று வீட்டினை சுத்தம் செய்து, பூஜை அரை முதலியவற்றை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் வீட்டில் மாவிலை, தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் அம்பிகைக்கு மண்டபம் இருந்தால் அதை அலங்கரித்து வைக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு மனையின் மீது அம்பிகையை அமரச் செய்ய வேண்டும்.
 
பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் விநாயகரை வழிபட வேண்டும். அதற்கு ஒரு வெற்றிலையை எடுத்து அதில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்க்கு குங்குமம் வைத்து, விநாயகருக்கு பிடித்த அருகம்புல் வைத்து அவரை வழிபட வேண்டும்.
 
பின்னர் ஒரு மனையில் அரிசி மாவினால் கோலமிட்டு அதில் ஒரு வாழை இலையை வைக்க வேண்டும். வாழை இலையில் அரிசியினை நன்கு பரப்பி வைக்க வேண்டும். பின் அதில் ஒரு கலச செம்பினை வைத்து அதற்க்கு மஞ்சள், குங்குமம், வைத்து அதை சுற்றி மாவிலையை கட்ட வேண்டும். அந்த கலசத்தின் மீது தேங்காய் வைக்க வேண்டும்.
 
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூ வைத்து அதன் மீது அம்பிகையை வைக்க வேண்டும். வரலக்ஷ்மி வீரத்திற்கு முதல் நாள் அம்மனை அலங்காரம் செய்து வாசலில் வைத்து வழிபட்டு அம்மனை உள்ளே அழைக்க வேண்டும்.
 
பின் அனைத்து செல்வங்களையும் தந்து அருள் புரிவாயாக என்று வேண்டிக் கொண்டு அம்மனை உள்ளே அழைத்து வந்து பின் அம்மனுக்கு பிடித்தமானவற்றை செய்து வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். கலசத்தில் நோன்பு கயிறு, தாலி சரடை வைத்து பூஜிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்பு தாலி சரடை கணவரிடமோ அல்லது வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலிகளிடம் கொடுத்து கட்டிக் கொள்ள வேண்டும்.