வீட்டிலேயே எவ்வாறு எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது...?
சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவதை, தட்சிணாயன புண்ணிய காலம் என்று குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவார்கள்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆடி 18–ந் தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம்.
ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம். அதற்கு செய்ய வேண்டியது இதுதான்.
ஒரு செம்பில் சிறிதளவு அரைத்த மஞ்சளை போட வேண்டும். பின்னர் அந்த செம்பில், நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் மஞ்சள் கரைந்துவிடும்.
வீட்டின் பூஜை அறையில் இருக்கும் திருவிளக்கில் தீபம் ஏற்றி, விளக்கின் முன்பாக செம்பு நீரை வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப்பூக்களை போட வேண்டும். தொடர்ந்து கற்பூர ஆரத்தி அல்லது நெய் தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். வழிபாட்டின் போது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.