1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வேதத்தின் மூலாதாரமாக விளங்கும் காயத்ரி மந்திரம் !!

உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்களில் சிறந்த காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஆத்ம சுத்தி கிடைக்கும்.

கீதையில் மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் கூறியுள்ளார். தன்னை ஜெபிக்கின்றவர்களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத்  திகழ்வதால் காயத்ரி மந்திரம் எனப் பெயர் ஏற்பட்டது.
 
விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவரது முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியதாம். ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்தபோது “த்ரயி” என்ற வேதசாரம் கிடைத்தது. அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்தபோது காயத்ரி தேவியின் வடிவம்  தோன்றியது.
 
வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது. விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி காயத்ரி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள்.
 
உலக நன்மையைக் கருத்தில் கொண்டு அவர் அதை நமக்கு வழங்கினார். விஸ்வாமித்திரரிடம் காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாலேயே ஸ்ரீராமபிரான்  இராவணனை வென்றதாகவும் சொல்லப்படுகிறது.
 
காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு. காப்பாற்றும் எனப் பொருள்படும் அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது  பயத்தைப் போக்கியருள்வாள். காயத்ரி தேவிக்கு சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணி எனும் ஐந்து முகங்கள் உண்டு.