வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நாக சதுர்த்தி பூஜை செய்யப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா...?

ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன. பகவான், அனந்தன்  என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில்  வசிக்கின்றனர்.

கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.
 
அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.
 
புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர்  சூட்டப்படுவதைக் காணலாம்.
 
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை  உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள்.

அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட  பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
 
விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று  மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.
 
இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.