வைகுண்டம் சேர இருக்கவேண்டிய விரதம் எது தெரியுமா...?
ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம்.
மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.
கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.
விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார்.
எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.