1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

விநாயகப் பெருமானை வணங்காது புராணங்களை எழுத முனைந்த வியாசர்

புராணங்களை எழுத முனைந்த வியாசரின் மனதில் பெரும் குழப்பம் பரவத் தொடங்கியது. புராண நிகழ்வுகள் அனைத்தும் அறிந்திருந்தும் ஒரு சுலோகம் கூட முழுமையாக இயற்ற முடியாத நிலை உருவானது.


 


பணியின் தொடக்கத்திலேயே இவ்வித விக்கினம் தோன்றியதால், பிரமலோகம் சென்று நான்முகனிடம் 'இந்நிலை உருவாகக் காரணம் யாது' என வினவினார்.
 
பிரமன் வியாசரிடம் 'முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஆசி பெறாது தொடங்கிய காரணத்தால் உம் பணியில் இவ்விதம் விக்கினம் உருவானது' என்று விளக்கினார். மேலும், 'ஸ்ரீகணேசரை வணங்காது கற்ப கோடி காலம் முயன்றாலும் ஒரு பாடலைக் கூட புனைய இயலாது' என்றும் அறிவுறுத்தினார்.
 
வியாசருக்கு ஸ்ரீவிநாயகரை மகிழ்விக்கும் முக்கிய திருநாமங்கள் அடங்கிய மந்திரத்தையும் உபதேசித்தார் நான்முகன். பூலோகம் திரும்பிய வேத வியாசர் அம்மந்திரங்களால் ஸ்ரீவிநாயகரை துதித்து, 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். வியாசரின் தவத்துக்கு மகிழ்ந்து கோடி சூர்ய பிரகாசமாய் திருக்காட்சி அளித்து அருளினார் ஸ்ரீவிநாயக மூர்த்தி.
 
பணிந்து போற்றிய வியாசருக்கு ஆசியளித்து, புராணங்களை இயற்றும் வல்லமையையும் அளித்து அருளினார் ஆனைமுகக் கடவுள். வியாசர் துதித்த ஸ்ரீவிநாயகரின் 16 திருநாமங்கள் மிகவும் சக்தி பொருந்தியவை. அனுதினமும் இம்மந்திரங்களால் ஆனைமுகக் கடவுளை துதித்து, அப்பெருமானின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.
 
1. ஓம் சுமூகாய நம;
2. ஓம் ஏகதந்தாய நம;
3. ஓம் கபிலாய நம;
4. ஓம் கஜகர்ணகாய நம;
5. ஓம் லம்போதராய நம;
6. ஓம் விநாயகாய நம;
7. ஓம் விக்கினராஜாய நம;
8. ஓம் கணாத்பதியே நம;
9. ஓம் தூமகேதவே நம;
10. ஓம் கணாத்யஷாய நம;
11. ஓம் பாலசந்திராய நம;
12. ஓம் கஜானனாய நம;
13. ஓம் வக்ர துண்டாய நம;
14. ஓம் சூர்ப்பகன்னாய நம;
15. ஓம் ஏரம்பாய நம;
16. ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம;