செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (14:01 IST)

இளைஞர் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு இடத்தை காலி செய்த தங்க தமிழ்செல்வன்..!

தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது இளைஞர் கேட்ட ஒரு கேள்வி காரணமாக பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு அந்த இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்வன், பாஜக வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்க தமிழ்ச்செல்வன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று அவர் பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதியில் பிரச்சாரம் செய்தார்

அப்போது அந்த பகுதியில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது ஜெகதீஷ் என்ற இளைஞர் தங்கள் பகுதிக்கு 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரவில்லை என்று கேள்வி எழுப்பினார் .அப்போது பேச்சை நிறுத்திய தங்க தமிழ்ச்செல்வன் ’நான் காலையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன், தொண்டை வலிக்கிறது, அதனால் இத்துடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறேன்’ என்று கூறி உடனே காரில் ஏறி கிளம்பிவிட்டார்

தங்க தமிழ்செல்வன் சென்ற பிறகு கேள்வி கேட்ட இளைஞரை திமுக நிர்வாகிகள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடவே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் திமுக நிர்வாகிகளிடம் இருந்து அந்த இளைஞரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran