ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (09:31 IST)

சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது!

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்து காவல்துறை விசாரணை. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் தளபதி விஜய் வீட்டிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் விசாரணையில் இரண்டுமே வதந்தி என்பதும் தெரியவந்தது. இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சூர்யாவின் பழைய அலுவலகமான ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. 
 
இதனை அடுத்து சூர்யாவின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனைக்கு பின் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மர்ம அழைப்பு புரளி என்பது தெரியவந்து உள்ளது. 
 
இதனை அடுத்து சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடி குண்டு வைத்ததாக மிரட்டிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தேடலின் முடிவாக மரக்காணத்தை சேஎர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.