1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (16:19 IST)

விளையாட்டு வினையானது : வாலிபரின் உயிரை பறித்த இட்லி போட்டி

இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட வாலிபர் மூச்சு திணறி இறந்த விவகாரம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பொங்கலையொட்டி கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் விழாக்கள் களை கட்டின. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்ளும் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு போட்டி ஒரு கூலித் தொழிலாளியின் உயிரை பறித்த சோக சம்பவம் நடந்துள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இட்லி சாப்பிடும் போட்டி ஒன்று நடந்தது. அதாவது, குறிப்பிட நேரத்திற்குள் அதிக இட்லிகளை சாப்பிடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், ஆர்வமுடன் பலரும் பங்கேற்றனர். 
 
போட்டி தொடங்கியதும் போட்டியாளர்கள் வேகமாக இட்லிகளை சாப்பிட தொடங்கினர். அப்போது, கூலித்தொழிலாளியான சின்னதம்பி என்ற வாலிபர் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மிக வேகமாக இட்லிகளை சாப்பிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக இட்லிகள் அவரது தொண்டையில் சிக்கி அவருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மயங்கி விழுந்தார். 
 
உடனடியாக போட்டி ஏற்பாடு செய்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதையடுத்து, அந்த பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.