வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (11:55 IST)

மைனாரிட்டி திமுக... துரைமுருகன் பேச்சால் காண்டான காங்கிரஸ்!

துரைமுருகன் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகினாலும் பரவில்லை என கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம். 
 
சமீபத்தில், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூரில் பேட்டி அளித்தார். இது திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதோடு துரைமுருகனின் பேச்சுக்கு காங்கிரஸார் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தனது டிவிட்டர் பக்கத்தில் துரைமுருகன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, திரு.துரை முருகன் அவர்களின் காங்கிரஸ் பற்றிய பேச்சு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொறுப்பில்லாத பேச்சுக்கு பொறுப்புள்ள நபர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டியது அல்ல என பதிவிட்டு அதோடு ஒரு அறிக்கையையும் பதிவிட்டுள்ளார். 
 
அந்த அறிக்கையில் திமுகவை மைனாரிட்டி என குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, துரை முருகன் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஆகிவிட்டது என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
 
2006-ல் திமுக சிறுபான்மை அரசாங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் எந்தவிதமான பங்கையும் கேட்காமல் பெருந்தன்மையுடன் வழி நடத்தினோம். அந்த ஆட்சியில் திரு துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அன்றைக்கு அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தயவு தன்னுடைய பதவியை காப்பாற்றுவதற்காக தேவைப்பட்டது என்று அவர் மறந்து விடக்கூடாது.
 
2011-ல் உங்களுடைய கூட்டணியில் தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தும் கூட அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவின் அழைப்பை புறக்கணித்தோம். கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டோம். அன்றைக்கு உங்களுக்கும் காங்கிரஸ் தேவைப்பட்டது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
 
2019 வேலூர் இடைத்தேர்தலில் உங்கள் மகன் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸின் பங்கில்லை என்று நினைக்கிறீர்களா? திரு.துரை முருகன் என்னைவிட வயதில், அனுபவத்தில் பெரியவர். ஆக அவருக்கு நான் அறிவுரை கூறாமல், வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மட்டுமில்ல உங்களுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேசாதீர்கள் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.