செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 24 ஜூன் 2016 (15:27 IST)

பிற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது - ராமதாஸ் அடுத்த அதிரடி!

தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறித்துவிட்டு பிற மாநிலங்களில் படித்தவர்களுக்கு கல்வி வாய்ப்பு அளிப்பதை ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள முதல் 10 மாணவர்களில் 5 பேர் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மாநிலங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கல்வியை அனைவருக்கும் வழங்கக்கூடாது; எல்லையின் பெயரால் கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்படக் கூடாது என்பது தான் பாமக நிலைப்பாடு என்ற போதிலும், தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறித்துவிட்டு பிற மாநிலங்களில் படித்தவர்களுக்கு கல்வி வாய்ப்பு அளிப்பதை ஏற்க முடியாது.
 
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி கேரள மாநிலத்தில் படித்தவர். முறையே மூன்றாம் இடம், நான்காம் இடம் மற்றும் ஏழாம் இடத்தை பிடித்தவர்கள்  ஆந்திரத்திலும், ஐந்தாம் இடத்தை பிடித்த மாணவர் தெலுங்கானாவிலும் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் ஆவர்.
 
பிறமாநிலங்களில் படித்து தமிழக மாணவர்களுக்கான இடங்களை பறிக்கும் மாணவர்களுக்கு இவர்கள் சிறு உதாரணம் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டு மாணவர்களின் வாய்ப்புகளை பறித்து விடுகின்றனர்.
 
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எவரும் பிற மாநிலங்களில் உள்ள முறை சார்ந்த அரசு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரிகளில் சேர முடியாது. அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் என்பதால் தங்கள் மாநில மாணவர்களின் வாய்ப்பைப் பறித்து இடம் வழங்க முடியாது என்று கூறி கல்லூரிகள் கதவை மூடி விடும். ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது.
 
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்த்தை பின்பற்றும் பள்ளிகளில் சேர்வது அதிகரித்து வருகிறது. காரணம் அம்மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் படித்தால் ஐ.ஐ.டி. என்.ஐ.டி உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற்று சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை தான். இது ஓரளவு உண்மையும் கூட.
 
பிற மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்போது கூட முதல் 10 இடங்களில் வந்த 4 வெளிமாநில மாணவர்களில் மூவருக்கு ஐ.ஐ.டி.க்களில் சேருவது தான் லட்சியம் என்றும், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் இடத்தில் சேர்ந்தாலும் ஐ.ஐ.டியில் இடம் கிடைத்தால் அண்ணா பல்கலையிலிருந்து விலகி அங்கு சேரப்போவதாகவும்  கூறியுள்ளனர். இவ்வாறு செய்வதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடம் பறிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய சமூக அநீதி என்பதில் சந்தேகமில்லை.
 
எனவே, வெளிமாநிலங்களில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கக்கூடாது. தமிழகத்தில் படித்தவர்களுக்கு மட்டும் தான் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.