1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (15:44 IST)

விவேக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ள வருமான வரித்துறை!

விவேக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ள வருமான வரித்துறை!

ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையின் அதிரடி சோதனை குறித்து ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் இன்று தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.


 
 
சசிகலா, தினகரன் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் என வருமான வரித்துறை 190 இடங்களில் அதிரடி சோதனை நடத்தின. இந்த சோதனையில் இளவரசியின் மகன் விவேக் வசமாக சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
180-க்கும் அதிகமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் நடந்த ரெய்டுகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று சொல்லப்படுகிறது. ஜெயா டிவி அலுவலகம், கொடநாடு எஸ்டேட் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை ஆகியவற்றிலும் சோதனை நடத்தியது வருமான வரித்துறை.
 
இந்நிலையில், இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமான வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் பற்றி வருமான வரித்துறையினர் குடைச்சல் கொடுக்க துவங்கியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. அந்த தியேட்டர்களை ரூ.1000 கோடிக்கு இளவரசியின் மகன் விவேக் விலைக்கு வாங்கினார் என அப்போதே குற்றம் சாட்டப்பட்டது.
 
ஆனால், தியேட்டர்களை விலைக்கு வாங்கவில்லை, 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளதாக பதில் அறிக்கை விடப்பட்டது. இது மட்டுமின்றி விவேக் கட்டுப்பாட்டில் மொத்தம் 136 தியேட்டர்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ஜாஸ் சினிமா தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்க ரூ.1000 கோடி பணம் எப்படி வந்தது என விவேக்கிடம் சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டது.
 
லக்ஸ் தியேட்டரில் உள்ள பொருட்களை அடமானம் வைத்து ரூ.42.50 கோடி கடன் வாங்கி அந்த தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்ததாக விவேக் கூறியதாக தெரிகிறது. 
 
இதனை ஏற்க மறுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஜாஸ் சினிமாஸ் மூலம் கருப்பு பணம் மாற்றப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விவேக் ஜெயா டிவி சிஇஓ-வாக உள்ளார். இவர் நிர்வகித்து வந்த 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
 
இந்நிலையில் சோதனை முடிவில் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் விவேக்கை அழைத்துச் சென்றனர். இந்த விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய விவேக் தன்னுடைய வீட்டின் முன்னர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
 
அதில், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறேன். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் குறித்து கணக்கு வழக்குகள் குறித்து கேள்வியெழுப்பினர், அதனைக் கொடுத்தேன், என்னுடைய திருமணத்தின் போது என்னுடைய மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்து கேட்டனர். எனது மனைவியின் நகைகளுக்கு உரிய ஆவணங்களை வைத்துள்ளேன்.
 
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கடைமையை செய்தார்கள், வருமான வரி கட்ட வேண்டியது எனது கடமை, அதனை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இது சாதாரண சோதனைதான். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள், அப்போதும் தகுந்த ஒத்துழைப்பு தருவேன் என்று கூறியுள்ளார்.