சாதி சான்றிதழ் வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டம்!
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பரவை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகர் ஆகிய அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு எஸ்.டி. காட்டுநாயக்கர் பழங்குடியினர் என்ற பெயரில் கடந்த ஆண்டு வரை சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக ,எஸ்.டி. காட்டுநாயக்கர் பழங்குடியினர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க முடியாது என, மதுரை மாவட்ட கோட்டாட்சியர் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளித்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவி மாணவிகளுடன் அவர்கள் பெற்றோர்களும் சேர்ந்து பரவை மூன்று மற்றும் நாலாவது வார்டு பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள வன காளியம்மன் உச்சிமாகாளியம்மன் கோயில் மந்தை திடலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சமயநல்லூர் போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.