ஊருக்குள் நுழைந்த அதிமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர்; துரத்திய பொதுமக்கள்
வாக்கு சேகரிப்பதற்காக ஊருக்கு நுழைந்த அதிமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர் ஆகியோரை பொதுமக்கள் துரத்தி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை ஒட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் மற்றும் பணிகள் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா உள்ளிட்ட அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கல்லம்பல் கிராமத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி ஆகியவை சரிவர கிடைக்கவில்லை என கூறி ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிமுகவினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. தங்களது தேவைகளை நிறைவேற்றிய பிறகு ஓட்டு கேட்க வரவேண்டும். அதுவரை தேர்தலை புறக்கணிக்கறோம் என்று விரட்டி அடித்தனர்.
பொதுமக்களின் எதிர்ப்பால் ஓட்டுக் கேட்க முடியாமல் வேட்பாளர், அமைச்சர் உள்பட அதிமுகவினர் திரும்பிச் சென்றனர். அதிமுக அமைச்சர், அதிமுக வேட்பாளரையும் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.