திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (14:48 IST)

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்: அதிமுகவை விமர்சித்த தேமுதிக!

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதை அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக இதனை விமர்சித்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அரசு ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது. 
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆவதாகவும் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதனை எதிர்கட்சியினர், மாணவர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ள நிலையில் கூட்டணி கட்சியான தேமுதிக இதனை விமர்சித்துள்ளது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானா, ஐகோர்ட் கண்டணம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. 
 
இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்தபிறகு, காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.