சுவரில் மோதிய பேருந்து: விபத்தில் சிக்கிய ஊழியர்கள்
சென்னை வடபழனியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமுற்றுள்ளனர்.
சென்னையில் உள்ள வடபழனியில் மாநகர அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பணிமனை உள்ளது. நேற்று இரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று வேகமாக சென்று சுவற்றில் மோதியது.
சரிந்து விழுந்த சுவற்றின் இடிபாடுகளில் 7 ஊழியர்கள் சிக்கி கொண்டனர். வேகமாக செயல்பட்ட மற்ற ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று காலையிலிருந்து போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியிறுத்தியுள்ளனர்.