1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜனவரி 2018 (15:52 IST)

இடி அமீன் அரசு: டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

எடப்பாடி பழனிச்சாமி, தினகரன், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்ததில் இருந்து தினகரன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் போல நடந்துகொள்கிறார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் சென்ற தினகரன் ஆளும் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டார். இந்நிலையில் இந்த அரசு இடி அமீன் அரசு போல உள்ளது என கூறியுள்ளார்.
 
சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து தொழிலாளர்கள் எட்ட நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. பொங்கலுக்கு மக்கள் எப்படி சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என கையை பிசைந்தவாறு நின்றார்கள்.
 
இதனையடுத்து நீதிமன்றத்தின் முயற்சியாலும், மக்கள் அவதிப்படுகிறார்கள் என போக்குவரத்து ஊழியர்கள் நினைத்தும் இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை. தொழிற்சங்கத்தினர் மக்கள் சிரமப்படுவதைப் பார்த்து அவர்களாகவே தற்காலிகமாக இந்த வேலைநிறுத்த வாபஸ் முடிவுக்கு வந்துள்ளனர். இந்த அரசாங்கம் சுய கவுரவம் பார்த்துக்கொண்டு இடி அமீன் அரசு போல உட்கார்ந்திருக்கிறது என்றார்.