1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2016 (13:57 IST)

அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தினால் நடவடிக்கை!

அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தினால் நடவடிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


 
 
வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம், பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் போன்றவற்றை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தடுக்க என்ன செய்யலாம்? என கேட்டிருந்தது.
 
உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அடையாள எண் கொடுக்கப்படும். அந்த நிறுவனம், தான் தயாரிக்கும் கொடிகள், பேனர்களில் அந்த எண்ணை குறிப்பிடவேண்டும்.
 
இந்த எண்ணை குறிப்பிடாமலும், 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாகவும் உள்ள கொடிகள், பேனர்கள் பறிமுதல் செய்யப்படும். அதை தயாரித்த நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.
 
தேர்தல் முடிந்தபிறகு பயன்படுத்தப்பட்ட கொடிகள், பேனர்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பகுதிவாரியாக சேகரித்து, அவை அறிவியல் பூர்வமாக மறுசுழற்சி செய்யப்படும்.
 
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரம் ஆகியோர் வழக்கை முடித்து வைத்தனர்.