'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு
ஸ்டாலின் கனவில் மட்டுமே முதலமைச்சராகலாம் என்றும், நிஜத்தில் அவரால் எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
மக்களுக்காக வாழ்ந்த தலைவர் எம்ஜிஆர். தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி; எம்ஜிஆர் தமிழகத்துக்கு மட்டும் தலைவரல்ல, தேசியத் தலைவர் என்பதுதான் உண்மை
மேலும் இன்று அதிமுகவில் இணைந்தவர்கள் கட்சிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும். அவ்வாறு விஸ்வாசம் உள்ள அனைவருக்கும் அதிமுகவில் பதவிகள் தானாக தேடிவரும்.
அஇஅதிமுக கட்சி ஆலமரம் போன்றது, அனைவரையும் வரவேற்று இடம் கொடுக்கும் ஜனநாயக கட்சி அஇஅதிமுக மட்டுமே. திமுக போன்று மற்ற கட்சிகள் எல்லாம் வாரிசு அரசியலை கொண்டது. திமுக அந்த குடும்பத்திற்கு சொந்தமான கட்சி; அதிமுக ஒட்டுமொத்த மக்களின் கட்சி.
கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர். மு.க. ஸ்டாலினிடம் ஆட்சி சென்றால் அது குரங்கு கையில் கிடைத்த பூ மாலைபோல் ஆகிவிடும். கூலிப்படைக்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்தால் அந்த நாடு உருப்படுமா?
இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி பேசினார்.