1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (17:46 IST)

ராஜிவ்காந்தியும், ஜெயலலிதாவும் ஒன்றா? - கடுப்பான காங்கிரஸ் தலைவர்

ராஜீவ்காந்தி கொலையை, தமிழக முதல்வரின் இறப்புடன் தொடர்புபடுத்தி பேசுவோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.


 

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஜெயலலிதா திரும்பி வந்துவிடுவாரா? என்று கூறியிருந்தது சர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திருநாவுகரசர், “ஜெயலலிதா இறந்தது குறித்து பல்வேறு விவாதங்களை செய்வதால் அவர் திரும்பி வரப்போவதில்லை என்ற அர்த்தத்தில் தான் எனது கருத்தை தெரிவித்து இருந்தேன். நான் சொல்வதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கருத்து தான்.

அந்த கருத்து கட்சியின் கருத்து இல்லையா என்று கருத்து தெரிவிக்கும், விமர்சிக்கும் தகுதி கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முகுல் வாஸ்னிக் போன்ற தலைவர்களுக்குத்தான் உண்டு. வேறு யாருக்கும் கிடையாது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை உடல் நலக் குறைவால் மறைந்த முதல்வரின் இறப்புடன் தொடர்புப்படுத்தக்கூடாது. அப்படி தொடர்புபடுத்தி பேசுவோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.