வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (16:17 IST)

முதல்வரின் இந்த நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன- திருமாவளவன்

ஒடிஷாவில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ள  நிலையில், ''சம்பவ இடத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைத்து,  இன்றைய நாளை துக்கநாளாகக் கடைபிடிக்கவும் ஆணையிட்டுள்ள முதல்வரின் இந்த நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன ''என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின்  ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) சென்னை நோக்கி வந்தபோது, ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் தடம்புரண்டு  மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததில், பெங்களூரில் இருந்து கொல்கத்தா  நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு, கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி 233 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என்று  ரயில்வே அதிகாரிகள் 4 பேர் கொண்ட முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிஷாவில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி அறிவித்த  நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’ஒடிசாவில் நடந்த கோர  இரயில் விபத்து நெஞ்சை உறைய வைக்கிறது.

நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடுமெனத் தெரியவருகிறது. இது இந்திய வரலாற்றில் விவரிக்க இயலாத பெருந்துயரமாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதாக இருந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவுக்கான  அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார் மாண்புமிகு முதல்வர்  முக.ஸ்டாலின்  அவர்கள். அத்துடன், மீட்புப் பணிகளில் ஒடிசா அரசுடன் இணைந்து  செயல்படுகிறார். தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். இன்றைய நாளை துக்கநாளாகக் கடைபிடிக்கவும் ஆணையிட்டுள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன.

மாண்புமிகு முதல்வருக்கு எமது பாராட்டுகள்.'' என்று தெரிவித்துள்ளார்.