இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி – தமிழ்பாட புத்தகத்தில் சர்ச்சை
தமிழ்நாட்டு பாடபுத்தகத்தில் உள்ள ஒரு பாடத்தில் “இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி” என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் 7ம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் புத்தகத்தில் “இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி” என்று இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு ஆட்சி மொழி எதுவும் கிடையாது என பலரும் கூற இந்த சம்பவம் சர்ச்சையானது. மேலும் ஒரு பகுதியில் ”சுதந்திரத்திற்கு பிறகு இஸ்லாம் தலைவர்கள் இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் நிறுவ முயன்றார்கள்” என்ற சர்ச்சைக்குரிய வரியும் அதில் இடம்பெற்றுள்ளது. அப்படி அவர்கள் முயன்றதாக எந்த ஆதாரமும் அடிப்படையிலேயே கிடையாது.
இந்த நிலையில் அந்த பகுதிகளை நீக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது பள்ளி கல்வி துறை. அதில் “இந்தியாவின் அலுவல் மொழி இந்தி, இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்” என சேர்த்து கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.
பாட புத்தகத்தை முன்னரே சோதித்து விநியோகிக்க மாட்டார்களா? இப்படி தவறான வரலாற்றை பதித்து விட்டு திருத்தி கொள்ள சொல்வது சரியாகுமா? என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.