வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (12:30 IST)

ஓசூர் செல்போன் கண்டெய்னர் கொள்ளை; சர்வதேச கும்பல் தொடர்பு! – என்.ஐ.ஏ விசாரணை!

ஓசூர் அருகே செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்தில் இருந்து செல்போன்களை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியை சூளகிரி அருகே மடக்கிய மர்ம கும்பல் அதில் இருந்த டிரைவர், க்ளீனரை தாக்கி விட்டு செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரித்த போலீஸார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் 5 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தலில் மேலும் 8 பேருக்கு தொடர்பு இருப்பதாக அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் திருடிய செல்போன்களை வங்கதேசத்தில் கள்ளசந்தையில் விற்றது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எலெக்ட்ரானிக் பொருட்களை கொள்ளையடித்து கள்ள மார்க்கெட்டில் விற்கும் ரஷ்யா, வங்கதேசம், துபாய் ஆகிய நாடுகளை சேர்ந்த கடத்தல் கும்பல்களோடு இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.