1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜனவரி 2021 (07:46 IST)

பிப்ரவரியில் 100மிமீ வரை மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாகவும் புயல் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது என்பது தெரிந்ததே. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் இந்த வருடம் கோடை காலத்தில் தமிழக மக்கள் தண்ணீர் கஷ்டத்தை அனுபவிக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதுமையாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் நல்ல மழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் அறுவடைக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது
 
இந்த நிலையில் ஜனவரியை அடுத்து பிப்ரவரி மாதமும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் ஒரு சில இடங்களில் 100 மில்லி மீட்டர் மழை வர வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: ஜனவரி மாதம் வரலாறு காணாத வகையில் மழையை எதிர் கொண்ட தமிழகம் பிப்ரவரி மாதமும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் நல்ல மழை பெய்தது. அப்போது கனமழையால் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் 2000 ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு மீண்டும் பிப்ரவரியில் மழை பெய்ய உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்