2026 தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் வரும்..! 52 சதவிகிதம் ஓட்டு இருந்தால் தனி பெரும்பான்மை ஆட்சி..! அண்ணாமலை..!
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் குறைவாக உள்ளது என்று தெரிவித்தார். ஜி.எஸ்.டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும் என்றும் 2024ம் காலாண்டில் மஹாஷ்டிரா 15, உத்திரபிரதேசம் 12, கர்நாடக 9 தமிழகம் 3.3 சதவிகதமாக வளர்ச்சி உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழகம் பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளது என விமர்சித்த அண்ணாமலை, தமிழகம் ஜி.எஸ்.டி மாநில வருவாய் மைனஸ் 11 பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவு நோக்கி சென்று கொண்டு உள்ளது என்றும் மற்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி குறித்து பேச்சு எழுந்துள்ளது என்றும் 52 சதவிகிதம் ஓட்டு இருந்தால் தனி பெரும்பான்மை ஆட்சியாக கருதப்படும் என்றும் அந்த காலம் முடிந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
2026ல் தமிழகத்தில் நான்கு போட்டி உள்ளது என குறிப்பிட்ட அண்ணாமலை, எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள், நல்லவர்கள் வெற்றி பெற முடியும் என்றும் தமிழக அரசியல் களம், 2026 தேர்தலில் மாறும் என்றும் கூறினார்.