திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 11 ஜூலை 2016 (14:50 IST)

ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது : வழக்கறிஞர் ராமராஜ்

சுவாதி படுகொலையில், போலீசார் அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது என்று ராம்குமரின் வழக்கறிஞர் ராமராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே அவருக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
அதன் முதல் படியாக, குற்றவாளியை அடையாளம் காணும் விதமாக, சிறையில் இன்று போலீசார் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில்,  ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட போது, நேரில் பார்த்தவர்கள், இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு, குற்றவாளி அவர்தானா என்று அடையாளம் காட்டுவார்கள்.
 
இந்நிலையில், இந்த அணிவகுப்பிற்கு ராம்குமாருக்கு ஆதரவாக ஆஜராகவுள்ள வழக்கறிஞர் ராமராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது “ முன்பெல்லாம் பெரும்பாலான திருட்டு, கொலை சம்பவங்கள் இரவில் நடக்கும். எனவே குற்றவாளியின் உருவம் யாருக்கும் தெரியாது. அதனால், அது சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களை வைத்து சிறையில் போலீசார் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். 
 
ஆனால், சுவாதி வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி என்று போலீசார் உறுதியாக கூறி வருவதோடு, அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு விட்டார்கள். அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை, உயர் அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர். பின்னர் எதற்காக இந்த அணிவகுப்பை போலீசார் நடத்துகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. ராம்குமாரை அடையாளம் சொல்பவர்கள், போலீசாரின் நிர்பந்தத்தை மீறி என்ன கூறப் போகிறார்கள்? எனவே இந்த அணிவகுப்பு சட்டவிரோதமானது. மேலும், இது போலீசாரின் மோசமான நடவடிக்கையை காட்டுகிறது” என்று கூறினார்.