பயணியின் தங்க நகைகளை அபேஸ் செய்யாமல் உரியவரிடம் ஒப்படைத்த ’தங்க மனிதர்’
ரயில் பயணி ஒருவர் தவற விட்ட நகை மற்றும் பணத்தை மன்னார்குடி ரயில் நிலை கண்காணிப்பாளர் உரியவரிடம் ஒப்படைத்தார்.
சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து-மன்னார்குடிக்கு மன்னை விரைவு ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் ரயில்வே ஊழியர்கள் ஒவ்வொரு பெட்டியாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பெட்டி ஒன்றில் கருப்பு நிறத்திலான டிராலி பேக் ஒன்று கிடந்துள்ளது.
அதைப் பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் பெட்டியை ரயில் நிலையக் கண்காணிப்பாளர் டி. மனோகரனிடம் ஒப்படைத்தார். அந்தப் பெட்டியில் 20 பவுன் நகை, 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பட்டுப்புடவைகள் இருந்துள்ளன.
தொடர்ந்து ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நகை, பணத்துக்கு சொந்தக்காரர் சென்னை தியாகராயநகர் ராமநாதன் தெருவில் வசித்துவரும் ஜெ.சந்திரகலா (69) என்பதும் அவர், சென்னையிலிருந்து தஞ்சாவூரை அடுத்துள்ள கருப்பூருக்கு செல்வதற்காக வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து சந்திரகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மன்னார்குடிக்கு வந்து தமது பெட்டியை நிலைய கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார். பெட்டியை எடுத்துக் கொடுத்த ஊழியருக்கும், நிலைய கண்காணிப்பாளருக்கும் சந்திரகலா நன்றி தெரிவித்தார்.